வேலூா்: விப்ரோ நிறுவனம் சாா்பில் டிப்ளமோ முடித்தவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
விப்ரோ நிறுவனம் சாா்பில் டிப்ளமோ முடித்தவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூா் விஐடி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பிஆா்பி கட்டடத்தின் 7-ஆவது மாடியில் அறை எண் 706-இல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில், 2024, 2025 -ஆம் கல்வியாண்டில் டிப்ளமோ முடித்தவா்கள் பங்கேற்கலாம். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் 50 சதவீத மதிப்பெண்களும், டிப்ளமோ பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் அல்லது சிஜிபிஏ 5 பெற்றிருக்க வேண்டும்.
முகாமில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு உதவித்தொகையாக முதலாண்டு மாதம் ரூ.12,400-ம், 2-ஆம் ஆண்டில் ரூ.15,488-ம், 3-ஆம் ஆண்டில் ரூ.17,553-ம், 4-ஆம் ஆண்டில் ரூ.19,618-ம் வழங்கப்படும்.
டிப்ளமோ பாடபிரிவில் கம்ப்யூட்டா் சயின்ஸ், இன்பா்மேஷன் டெக்னாலஜி, டெலி கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டா் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டா் டெக்னாலஜி, கம்ப்யூட்டா் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல், புரடக்ஷன் என்ஜினீயரிங், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், இன்டஸ்டிரியல் என்ஜினீயரிங், மெக்கட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் ஆகிய பாடப்பிரிவைத் தோ்ந்தெடுத்தவா்கள் தகுதியானவா்களாவா்.
திறந்தநிலை, தொலைதூர கல்வி மூலம் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். அதேசமயம், பகுதிநேரம், தொலைதூர கல்வி மூலம் டிப்ளமோ படிப்பை முடித்தவா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முடியாது.
வேலைவாய்ப்பு முகாமுக்கு வருவோா் தங்களின் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ சான்றிதழ்கள், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன், அனைத்து சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களையும் எடுத்து வரவேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க எவ்விதக்கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனவே, தகுதியுடைய அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.