பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப் படையின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கைய குறித்து கேள்வி கேட்பதற்கு ராணுவ வீரர்களின் துணிச்சலை சந்தேகிப்பதற்கு சமம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (சனிக்கிழமை) பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
"விமானப் படை நடத்திய தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கும், அங்குள்ள பயங்கரவாதிகளுக்கும் இந்தியாவால் வலுவான செய்தியை தெரிவிக்க முடிந்தது. ஆனால், ஒரு சில அரசியல் கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் வருத்தம் கொண்டு, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் கேட்கின்றனர். அவர்களுக்கு தேவை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை. ஆனால், துணிச்சல் மிக்க ஒருவர் சடலங்களை எண்ணிக்கொண்டிருக்கமாட்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளை ஓசாமாஜி, ஹபீஸ் சயீத்ஜி என்று மரியாதையுடன் தான் அழைப்பார்கள். இது இந்தியாவுக்கு உண்டான பெருமையை பாதிக்கிறது.
பயங்கரவாதத்தை ஒழிப்பது என்று வந்துவிட்டால், நாட்டில் உள்ள மக்கள் வேற்றுமைகளை மறந்து, ஒன்றிணையவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் 3 வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதலிரண்டு தாக்குதல் உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்கான பதிலடி நடவடிக்கைகளாகும். 3-ஆவது நடவடிக்கை குறித்து கூறமாட்டேன்.
தற்போதைய இந்தியா பலவீனமான இந்தியா அல்ல, பலமான இந்தியா. எங்களது கொள்கை தெளிவாக உள்ளது. நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யமாட்டோம். ஆனால், யாரேனும் நம்மை தொந்தரவு செய்ய முயற்சித்தால் அவர்களை தாக்குதவதற்கு தயங்கமாட்டோம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை சும்மா விடாமாட்டோம். எங்களிடம் உறுதியான தலைமை உள்ளது. 56 இன்ச் மார்புக்கு என்ன ஆயிற்று என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். அது தற்போது 65 இன்ச் ஆக மாறியுள்ளது.
பொருளாதாரத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2028-இல் அமெரிக்கா, ரஷியா அல்லது சீனாவை முந்தி உலகின் வலிமையான 3 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும்" என்றார்.
மேலும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை சுட்டிக்காட்டி, பாஜக அரசு அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துகிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.