மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. உடலிலுள்ள கழிவுப்பொருள்களை சிறுநீராக வெளியேற்றுவதுதான் சிறுநீரகத்தின் செயல் என்று பெரும்பாலும் அறியப்பட்டுள்ள செய்தி. ஆனால் நமது உடலிலுள்ள எலும்புகளின் வளர்ச்சிக்கும், இரத்த அபிவிருத்திக்கும், உடலின் அமிலத்தன்மையினை ஒரே சீராக நிலை நிறுத்துவதற்கும் சிறுநீரகமே முக்கிய செயல்பாட்டுக் கருவி.
சிறுநீரகப் பாதிப்பு: சிறுநீரகப் பாதிப்பு மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, மற்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுடன் ஒப்பிடும்போது அதிகரித்து வருகிறது.
நமது விலாவின் பின்புறத்தில் பக்கத்திற்கு ஒன்றாக உள்ள இரண்டு சிறுநீரகங்கள் இரண்டு வகையான செயலிழப்புக்கு ஆளாகின்றன.
1. திடீரென வரும் சிறுநீரகச் செயலிழப்பு
(Acute Renal Failure) . 2. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குச் சரியான, முறையான சிகிச்சை செய்து கொள்ளாமையால் நாளடைவில் சிறுநீரகங்கள் பாதித்துச் செயலிழப்பது
(Chronic Renal Failure) .
திடீரென ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பு: நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சிறுநீரகங்கள் திடீரென தங்களது செயல்தன்மையினை இழக்க நேரிடலாம். இதற்கான காரணங்களைப் பொருத்தவரை வயிற்றுப்போக்கு, பாம்புக் கடி, கதண்டு என்ற விஷ வண்டு கடி, மலேரியா, லெப்டோஸ்பைரோசிஸ் என்ற உயிர்க்கொல்லி நோய், ஒவ்வாத மாத்திரைகளை உட்கொள்ளுதல், பிரசவ காலங்களில் ஏற்படுகின்ற அதிக இரத்தப் போக்கு, கருக்கலைப்பின் போது சிறுநீரகச் செயல் பாதிப்பு என்று வரிசைப்படுத்தலாம்.
பாம்புக்கடி, வயிற்றுப்போக்கு, கதண்டு என்ற விஷ வண்டு கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளாக மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் வருகின்றனர்.
பாம்புக் கடி: வயல்களில் வேலை செய்கின்ற போதும், கிராமப்புறங்களில் வழக்கமாக உள்ள, திறந்த வெளிகளில் படுத்து உறங்கும் போதும் பாம்புக் கடியினால் பாதிக்கப்படுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நல்ல பாம்பு கடித்தால் அதனுடைய விஷம் நரம்பு மண்டலத்தைத்தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்க நேரிடுகின்றது. கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்புகள் கடித்தால் இரத்த முறிவு ஏற்பட்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. தஞ்சாவூர் மருத்துவமனையில் அதிகமாக எதிர்கொள்ள நேர்வது, கட்டு விரியன் பாம்பு கடித்து அதற்குரிய விஷ எதிர்ப்பு ஊசியினை குறித்த அளவு போட்டுக் கொள்ளாதது; பல்வேறு மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழப்புக்கு ஆளாகின்றனர். கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீர் பிரியாமலும், சிறுநீர் சிவப்பாகவும், வெளியேறுகின்ற சிறுநீரின் அளவு குறைவான நிலையில் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதிய சிகிச்சை முறை: பாம்புக் கடியினால் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறிய குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். தூங்குகின்ற போதும், கால்நடைகளுக்குப் புல் சேகரிக்கும் போதும், பெற்றோர்களுக்கு வயலில் உதவி செய்கிற போதும், சிறுவர்கள் கூட பாம்புக் கடியினால் பாதிக்கப்படுகின்றார்கள். பொதுவாக இவர்களுக்கு டயாலிஸ் செய்து சிறுநீரக செயலிழப்பினின்று காப்பாற்றப்படுகின்றனர்.
பாம்பு கடித்த இடத்தில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் அழுத்தத்தை அளந்து அதற்கு ஏற்றாற்போல மருத்துவ சிகிச்சையினை மேற்கொண்டு சிறுநீரக செயலிழப்பினால் ஏற்படுகின்ற இறப்பு விகிதம் குறைக்கப்படுகிறது. அண்மையில் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மகன் மூவரையும் கரும்புகட்டு தூக்குகின்ற போது பாம்பு கடித்து மூவரும் மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அம்மூவரும் காப்பாற்றப்பட்டனர்.
கதண்டு - விஷ வண்டு கடி: பாம்புக் கடி ஒரு புறமிருக்க கதண்டு என்ற விஷ வண்டினால் கடிபட்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சைப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். கதண்டு வண்டுகள் மாமரம், தென்னை, பனைமரங்களில் கூடுகட்டி வாழ்கின்றன. இவைகள் மாலை நேரத்தில் கூட்டுக்குள் சென்று கூட்டை மூடிவிடும். இந்தக் கூட்டை தக்க முன்னெச்சரிக்கையின்றி, பாதுகாப்பின்றி கலைத்தால் அவ்வண்டுகள் எதிர்வரும் நபரைத் தாக்குகின்றன. பல கதண்டுகள் ஒரே சமயத்தில் கடிக்கின்றபோது இரத்தத்தின் அழுத்தம் குறைந்து சிறுநீரகங்களின் செயல்தன்மை குறையும்.
அந் நோயாளியினைப் பரிசோதிக்கும்போது, கதண்டுகள் கடித்த விஷத்தினால் சதைகள் சிதைந்து சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதை உறுதி செய்துவிட முடியும். கதண்டு கடிக்கு உடனே வைத்தியம் செய்தால் சிறுநீரகத்தின் செயல் இழப்பினைத் தவிர்த்துப் பாதுகாக்கலாம்.
லெப்டோஸ்பைரோசிஸ்: லெப்டோஸ்பைரோசிஸ் நோய், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி வரை தென்னகத்தில் சாதாரண காய்ச்சலில் தொடங்கி மூளை திசுக்களைப் பாதித்து சிறுநீரகச் செயலிழப்பினை ஏற்படுத்தி மரணம் வரை கொண்டு செல்கின்ற நோயாகும்.
வீட்டில் வளர்க்கின்ற கால்நடைகள் மற்றும் வீட்டைச் சுற்றி வாழ்கின்ற எலி, பெருச்சாளி போன்றவை வெளியேற்றுகின்ற சிறுநீரின் வழியே இந்நோய்க் கிருமிகள் மழையினால் தேங்கிக் கிடக்கின்ற நீர், சாக்கடைக் கழிவு நீரில் கலக்கின்றன. இந்த நீரில் நமது கால்கள் படுகின்ற போது காலில் உள்ள சின்ன, சின்ன வெடிப்புகள், காயங்கள் மூலமாக நமது உடலில் புகுந்து குளிர்காய்ச்சல், மஞ்சள்காமாலை மற்றும் சிறுநீரகப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இதனை தக்க சமயத்தில் கண்டறிந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சையினை மேற்கொண்டு இறப்பினைத் தவிர்க்கலாம்.
பிரசவம், கருக்கலைப்பினால் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பு: மருத்துவரின் ஆலோசனையின்றி, அனுமதி இன்றி, அனுபவ வைத்தியரினால் குச்சி, காட்டாமணக்குப் பால் போன்ற நச்சுப் பொருள்களால் செய்யப்படுகின்ற கருக்கலைப்புகள் சிறுநீரகச் செயலிழப்பு மட்டுமல்லாது உயிரிழப்பையே ஏற்படுத்தி விடுகின்றன. பிரசவ காலங்களில் ஏற்படுகின்ற இரத்தப் போக்கு, உயர் ரத்த அழுத்ம் அதிகமாகி குழந்தை கருப்பையிலேயே இறந்த நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
வயிற்றுப்போக்கு, வலி நிவாரணி: சாதாரண வயிற்றுப் போக்கு தானே என்று நாம் அலட்சியமாக விட்டால் அது திடீர் சிறுநீரகச் செயலிழப்பு பாதிப்பில் கொண்டு விடும். வயிற்றுப் போக்கு ஏற்பட்ட உடன் சர்க்கரை, உப்பு கலந்த திரவத்தை நிறைய பருகி உடலில் ஏற்படும் நீர்க் குறைவை சமன்செய்தல் வேண்டும். இல்லை என்றால் சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தம் குறைந்து சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பேற்படும்.
மாத்திரைகள் உஷார்: இன்றைக்கு எங்கு பார்த்தாலும் வலி நிவாரணிகளின் விளம்பரங்கள் தான். தேவைப்படுகின்ற போது அளவுக்கதிகமாகவும், தேவையற்ற நேரங்களிலும் மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரையின்றியும் உட்கொள்வதனால் அவை ஒவ்வாமையினை ஏற்படுத்தி சிறுநீரகங்களைப் பாதித்து செயலிழக்கச் செய்கின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரையின்றி தேவையில்லாமல் தாங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடுவது தவறு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.