food to prevent breast cancer 
உணவே மருந்து

கேன்சரை தவிர்க்க இந்த 5 குப்பை உணவுகளைத் தொடாதீர்கள்!

நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் உணவே மருந்து என்று வாழ்ந்த நம் முன்னோர்கள்.

தினமணி

உணவே மருந்து என்று வாழ்ந்த நம் முன்னோர்கள் நமது உணவு முறையை மிகச் சரியாக வகுத்து, காலம்தோறும் அதனைப் பின்பற்றி நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எந்த உணவு நல்லது, எது கெட்டது என்று பாகுபடுத்தவே முடியாத அளவுக்கு நச்சுக்கள் உணவுப் பொருட்களில் இரண்டறக் கலந்துவிட்டன. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சாப்பிட பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஆனால் சில ஆய்வுகளில் தெரிவிக்கும் உணவு குறித்த விழிப்புணர்வைப் படித்து நிச்சயம் நம்மால் தவிர்க்க முடிந்தவற்றைத் தவிர்த்துவிடலாம். சில உணவுகளை கட்டாயம் தவிர்க்கச் சொல்கிறார்கள் சத்துணவு நிபுணர்கள். அவை,

சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவையாக இருக்கும் என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடுதல். அதிகப்படியான எண்ணெய் ஊற்றி டீப் ஃப்ரை செய்வதால், இது அதிகளவில் உப்பு மற்றும் கொழுப்பு சத்துக்களை (saturated fat) கொண்டிருக்கின்றன, அவை  உடலின் செரிமானத்துக்கு உகந்தது இல்லை. அதிகளவு தினமும் இத்தகைய உணவை உட்கொண்டு வந்தால், உடலில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதற்கான காரணமாகிவிடும். உணவு அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் போதும் அதிலிருந்து அக்ரிலாமைடு என்ற ரசாயனம் தோன்றும், இது புற்றுநோய் அபாயத்தை உருவாக்கும் ரசாயனம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த அக்ரிலாமைடு சிகரெட்டுகளிலும் காணப்படுகிறது, அவை மிகவும் ஆபத்தானவை என்பதில் மாற்று கருத்து இல்லை.


சிவப்பு இறைச்சி

பொதுவாக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். நல்ல கொழுப்புள்ள உணவுகள் உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. ஆனால் கெட்ட கொழுப்பு நிச்சயம் தீங்கினை ஏற்படுத்தும். இறைச்சியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமுள்ளது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட எவ்வகை இறைச்சியையும் முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. இதைக் கடைபிடிப்பது எளிதானதல்ல, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, பார்பெக்யூ உள்ளிட்ட பல சுவையான உணவுப்பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

இந்த உணவுகள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய நைட்ரைட்டுகளைப் பயன்படுத்தி பாதுகாக்கப்படுகின்றன. சமைத்த உணவைப் பாதுகாப்பதற்கான நுட்பமாக வழியாக அது இருந்தாலும், உணவே விஷமாகிவிடும் அளவிற்கு இதில் ஆபத்துள்ளது.  

பாப்கார்ன்

பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் போலவே, மைக்ரோவேவ் பாப்கார்னும் உடலுக்கு பிரச்னை ஏற்படுத்தும். காரணம் அது தயாரிக்கப்படும் முறைதான். பெரும்பாலான சமயங்களில் ஓவன்களில் சமைக்கப்படும் ஒருசில உணவுகளால் கணையம், சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோய் ஏற்படுகிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.

மைதா

முழு தானியங்கள் மிகவும் ஆரோக்கியமானவை, ஆனால் சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவு இதற்கு முற்றிலும் எதிர்மறையானது. மைதாவுக்கு வெள்ளை நிறம் எப்படி கிடைக்கிறது? காரணம் குளோரின் வாயு அதிகளவில் அதில் செலுத்தப்படுவதால்தான். நிச்சயம் அது உண்ணத்தகுந்தது இல்லை.

ஊட்டச்சத்து அதிகம் இல்லாத இந்த மைதா மாவு மிக அதிகளவில் கிளைசெமிக் அளவைக் கொண்டுள்ளது, அதாவது இது உடலில் சர்க்கரையாக உடைந்து, ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை அதிகரித்துவிடும். உடலில் உள்ள இந்த நிலை புற்றுநோய் உயிரணுக்களுக்கு உணவாகும் என்று கருதப்படுகிறது. 

மது

அதிகப்படியான மது வகைகளை உட்கொள்வது உடல்நலத்துக்கு தீங்கானது.  இது விளம்பர வாசகம் போலத் தோன்றினாலும் உண்மை அதுதான். அதிகப்படியான குடிப்பழக்கம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைக் கடினமாக உழைக்க வைக்கிறது, மூளையை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது.

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் வாய், உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவற்றில் புற்றுநோய்க்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பொதுவாக, பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மற்றும் ஆண்களுக்கு இரண்டு கோப்பை பாதுகாப்பான அளவாகக் கருதப்படுகிறது, குடிப்பதால் உண்மையில் ஆரோக்கியத்துக்கு பெரிய நன்மைகள் எதுவும் இல்லை. சிவப்பு ஒயின் இதயத்துக்கு நல்லது தினமும் குறைந்த அளவு எடுத்துக் கொள்வதில்லை தவறில்லை என்று சிலர் கூறினாலும், அதற்கு மாற்றாக சிவப்பு திராட்சை சாப்பிடலாம். 

ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிக எளிய வழிமுறை, வீட்டில் சமைத்த உணவுகளைக் கூடுமான வரையில் உட்கொள்வதும், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும்தான். அடர் வண்ண காய்கறிகள், பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT