யார் பெறுவார் அந்த அரியாசனம்-11: குஜராத்தில் "காம்'; பிகாரில் "ஹைம்'!
எண்பதுகளில் மாதவ்சிங் சோலங்கி ஏற்படுத்திய "காம் என்றழைக்கப்பட்ட ஜாதிக் கூட்டணி வெற்றி பெற்றதற்குக் காரணம் ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த ஆதரவு அந்தக் கூட்டணிக்குக் கிடைத்தது என்பது மட்டுமல்லாமல், குஜராத் மாந
எண்பதுகளில் மாதவ்சிங் சோலங்கி ஏற்படுத்திய "காம் என்றழைக்கப்பட்ட ஜாதிக் கூட்டணி வெற்றி பெற்றதற்குக் காரணம் ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த ஆதரவு அந்தக் கூட்டணிக்குக் கிடைத்தது என்பது மட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் நம்ம ஊர் வேளாளர்களுக்கு நிகரான பட்டேல் போன்றவர்கள் முழுமையாக அன்றைய எதிர்க்கட்சியான ஜனதாக் கட்சியை ஆதரிக்காமல் இருந்ததுதான்.
இப்போது ஆதிவாசிகளின் ஆதரவு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுக்குமாகப் பிரிந்துவிட்டது. மேலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி, க்ஷத்திரியர்களைத் தவிர ஏனைய உயர் ஜாதியினரான பிராமணர்கள், பட்டேல்கள் போன்றவர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று ஒரு பலமான கூட்டணியை உருவாக்கிக் கொண்டு விட்டார். குஜாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம், உத்தரப்பிரதேசத்தில் கல்யாண் சிங் அமைத்ததுபோல உயர் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை உள்ளடக்கிய பலமான ஜாதிக் கூட்டணிதான்.
பிகார் மாநிலத்திலும் நிலைமை இதைப் போலத்தான். தொண்ணூறுகளில் ஹரிஜன், யாதவ், முஸ்லிம் ஆகிய மூன்று பிரிவினர்கள் ஒருங்கிணைந்த வாக்கு வங்கி ஒன்றைத் தனக்கு ஏற்படுத்திக் கொண்டார் லாலு பிரசாத் யாதவ். அதற்கு "ஹைம்' (ஏவங) என்று பெயரிட்டார். மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினரின் ஆங்கில முதலெழுத்தின் கூட்டணிதான் அது.
ரத யாத்திரை சென்ற அத்வானியைக் கைது செய்தது முதல் முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்ட லாலு பிரசாத் யாதவ், பிற்படுத்த சமுதாயங்களின் ஆதரவையும் முழுமையாகப் பெற்றிருந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயமான "பாசி'க்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் ராம் விலாஸ் பாஸ்வானையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஒரு பலமான ஜாதிக் கூட்டணியை உருவாக்கியதுதான் லாலு பிரசாத் யாதவின் மிகப் பெரிய வெற்றி.
அதுவரை காங்கிரசை ஆதரித்து வந்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், நம்ம ஊர் வேளாளர்களுக்கு நிகரான காயஸ்த் மற்றும் பூமிகார் ஜாதியினர், கணிசமான அளவு இல்லாவிட்டாலும் வணிகர்களான வைஸ்யர்கள் போன்றவர்களின் ஆதரவு பாரதிய ஜனதாக் கட்சிக்கு மாறியது. இந்த உயர் ஜாதியினரில் ஒரு பிரிவினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மத்தியில் பாபு ஜெகஜீவன்ராம் உருவாக்கி வைத்திருந்த ஆதரவும்தான் காங்கிரஸிடம் எஞ்சியது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அந்த ஆதரவும் காங்கிரஸýக்கு இப்போது குறைந்துவிட்டது.
யாதவர்களை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியதும், தன்னை வளர்த்துவிட்ட, தனக்கு பலம் சேர்த்த தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் மற்றும் யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை உதாசீனப்படுத்தியதும் லாலு பிரசாத் யாதவ் அதிகார போதையில் செய்த மிகப்பெரிய தவறு. யாதவ் பிரிவினரின் மேலாதிக்கத்தை குர்மி, கோரி போன்ற ஏனைய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தால் சகித்துக் கொள்ள முடியாமல் போனபோது, குர்மி இனத்தவரான நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார்.
ஜனதா தளம் உடைந்து, லாலு பிரசாத் யாதவ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று தனது கட்சிக்குப் பெயர்வைத்துக் கொண்டார். ராம் விலாஸ் பாஸ்வானும், தனியாகப் பிரிந்து லோக் ஜனசக்தி கட்சி என்று தனிக்கட்சி தொடங்கிவிட்டார். லாலு பிரசாத் யாதவின் "ஹைம்' வலுவிழந்தது. யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும், உயர் ஜாதியினரின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்ற பாரதிய ஜனதாக் கட்சியும் கூட்டணி அமைத்தபோது, யாதவ் மற்றும் முஸ்லிம் கூட்டணி படுதோல்வி அடைய நேர்ந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தது.
உத்தரப்பிரதேசத்திலும் இதேதான் நடந்தேறி இருக்கிறது. 1993-ல் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தபோது, அது பலமான பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டணியாக இருந்ததால் ஆட்சியைப் பிடித்தது. இரண்டே ஆண்டுகளில் முலாயம் சிங்கின் போக்கு மாயாவதிக்குப் பிடிக்காமல் போனதால்தான் அந்தக் கூட்டணி உடைந்தது.
அதேபோல, 1997-ல் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, கல்யாண் சிங் தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது, அந்தக் கூட்டணி தாழ்த்தப்பட்ட சமார்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் உயர் ஜாதியினரின் பலமான கூட்டணியாக இருந்ததால், யாதவ் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவு பெற்ற முலாயம் சிங்கின் கூட்டணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
கல்யாண் சிங்கை பாரதிய ஜனதாக் கட்சி ஓரங்கட்டியது முதல் பாஜக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஆதரவை இழந்தது. உத்தரப்பிரதேசத்தில் அந்தக் கட்சி பலமிழந்து விட்டது. யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்கள், உயர் ஜாதியினர், சிறுபான்மையினரின் ஒரு பகுதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு பலமான கூட்டணியைத் தனது பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாயாவதி ஏற்படுத்திக் கொண்டதால் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
பக்கத்தில் உள்ள கேரளத்தை எடுத்துக் கொண்டாலும், கூர்ந்து கவனித்தால் சிறுபான்மையினரான இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள், உயர் ஜாதி இந்துக்களுடன் இணைந்த கூட்டணிதான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி. இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு வாக்கு வங்கி என்பது பிற்படுத்தப்பட்ட ஈழவர் சமுதாயத்தினரும், தாழ்த்தப்பட்டவர்களும்தான். வெறும் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது.
வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இந்திய சமுதாயத்தின் அடிப்படையாக விளங்கிய விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் இந்த ஜாதி வாக்கு வங்கி அரசியலுக்கு ஒரு காரணம். பொதுவாகவே நிலச்சுவான்தார்களாகவும் ஜமீன்தார்களாகவும் உயர் ஜாதியினர் இருந்து வந்தனர். அவர்களது நிலங்களைப் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தவர்கள் இடைப்பட்ட ஜாதியினர் என்று கருதப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர். அந்த நிலங்களில் விவசாயக் கூலிகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தவர்.
யாருடைய நிலத்தையோ உழுது பயிரிடும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் எங்களது உழைப்பைக் குறைந்த கூலி தந்து சுரண்டுகிறான் என்கிற அடிப்படை தார்மிகக் கோபம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டு. யாரோ தாத்தன் பாட்டன் கொடுத்த சொத்தை அனுபவிக்கும் உயர் ஜாதிக்காரன் தனது உழைப்பில் வீட்டுத் திண்ணையில் சீட்டாடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கருதினர். பொருளாதார முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், கல்வி அறிவு போன்றவை ஜாதி உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், அடிப்படையில் இருக்கும் பரஸ்பர கோபதாபங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை.
தாழ்த்தப்பட்டவருக்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் இடையில்தான் இப்போதும் ஜாதிக் கலவரங்கள் அவ்வப்போது எழுகிறது. வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பிரிவுகளுமே இப்போது சொந்த நிலத்தை உழுது பயிரிடும் விவசாயிகளாக மாறிவிட்டிருக்கின்றனர். ஆனாலும் பழைய பகை தொடர்கிறது. இது காலப்போக்கில் குறைந்து வருகிறது என்பது உண்மை. ஆனால், அரசியல் ரீதியாக சுரண்டப்பட்ட சமுதாயம் ஆதிக்க சமுதாயத்தைத் தொடர்ந்து எதிர்க்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதான எதிரியாக சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எதிரியாக பாரதிய ஜனதாக் கட்சியும் இருப்பதற்கு இந்த அடிப்படை உணர்வுதான் காரணம்.
(தொடரும்)