யார் பெறுவார் அந்த அரியாசனம் - 25: சரித்திரம் திரும்புகிறதா?
இன்றைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் நிலைமை ஏறத்தாழ 1996-ல் சங்கர் தயாள் சர்மாவின் நிலைமையைப் போலத்தான் இருக்கிறது. 1996 தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சி 164 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக
இன்றைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் நிலைமை ஏறத்தாழ 1996-ல் சங்கர் தயாள் சர்மாவின் நிலைமையைப் போலத்தான் இருக்கிறது. 1996 தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சி 164 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக 11வது மக்களவையில் இடம் பெற்றது. அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 140 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வாக்குக் கணிப்புகளின்படி இந்தத் தேர்தலில், பாஜக பெற்ற இடங்களைக் காங்கிரஸýம், 1996-ல் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களை பாஜகவும் பெறக்கூடும் என்று தெரிகிறது. எண்ணிக்கையில் மாறுபட்டாலும் நிலைமை அதுதான் என்கிறார்கள்.
1996-ல் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பாரதிய ஜனதாக் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். வாஜ்பாய் தலைமையில் ஒரு அரசும் பதவி ஏற்றது. ஆனால் 13 நாள் மட்டுமே தாக்குப் பிடித்த அந்த அரசு, நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்கொள்ளாமலே பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
பாஜகவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என்கிற காரணத்தால் ஜனதா தளம், மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் அமைத்த ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குக் காங்கிரஸ் தள்ளப்பட்டது. முதலில் தேவ கெüடா தலைமையிலும் பிறகு ஐ.கே. குஜ்ரால் தலைமையிலும் ஐக்கிய முன்னணி அரசு இரண்டு ஆண்டுகளை நித்திய கண்டத்துடன் நகர்த்தியது.
முன்பே குறிப்பிட்டது போல, தனிப்பெரும் கட்சியாகவும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாகவும் காங்கிரஸýம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் வெற்றி பெற்றாலும்கூட ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை அதற்குக் கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறியான விஷயம்.
இப்படி ஒரு நிலைமையை 15வது மக்களவை சந்திக்கப் போகிறது என்பதை யார் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, இடதுசாரிகள் நிச்சயமாக எதிர்பார்த்தனர் என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள் நினைத்ததுபோல, அணுசக்தி ஒப்பந்தப் பிரச்னையில் மன்மோகன் சிங் அரசு தோல்வி அடைந்திருக்குமேயானால், அதையே கொள்கை அடிப்படையிலான கேடயமாக்கி, அரசியல் ரீதியாகத் தங்களது பலத்தை மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரிகள் தக்கவைத்துக் கொண்டிருக்க வாய்ப்பு இருந்தது.
இப்போது, வாக்குக் கணிப்புப்படி இடதுசாரிகளின் மக்களவை பலம் கணிசமாகக் குறைந்த நிலையிலும், காங்கிரஸýக்கு சாத்தியமல்லாத பெரும்பான்மை பலத்தைக் காங்கிரஸின் ஆதரவுடன் மூன்றாவது அணி பெற முடியும். அதிலும் குறிப்பாக சரத் பவாரின் தலைமையில் அரசு அமைவதாக இருந்தால், சிவசேனை, அதிமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், சமாஜவாதி கட்சி என்று இடதுசாரிகள் மூன்றாவது அணிக்கு சுமார் 150 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி விட முடியும். காங்கிரஸின் ஆதரவும் சேரும்போது 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 300க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு அந்த ஆட்சிக்குக் கிடைத்து விடும்.
இடதுசாரிகளின் இந்த முயற்சிக்குக் காரணம், பதவி மோகம் மட்டுமல்ல என்று பிரகாஷ் காரத் உள்பட அதன் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டுமே தனியார் மயம், உலக மயம், அன்னிய முதலீடு, பங்குச் சந்தை சார்ந்த பொருளாதாரம், விவசாயத்தை விட ஏற்றுமதி சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற பொருளாதாரக் கொள்கைகளிலும், வெளிவிவகாரக் கொள்கையிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுப்பதால், இதற்கு மாற்றாகக் கலப்புப் பொருளாதாரம், பண்டித நேருவின் அணிசாரா வெளிவிவகாரக் கொள்கை, விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை என்று மாறுபட்ட கொள்கைக் கூட்டணியை அமைப்பதன் முதல்படிதான் இது என்பது இடதுசாரிகளின் வாதம்.
இடதுசாரிகளின் அரசியல் கணக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை சரி. ஆனால், இந்த எண்ணிக்கை பலமும், ஆட்சி அமைக்கும் சக்தியும் இரண்டு விஷயத்தைச் சார்ந்து இருக்கிறது. முதலில், இப்படி ஒரு ஏற்பாட்டைக் காங்கிரஸ் ஆதரித்தாக வேண்டும். தனிப்பெரும் கட்சியான காங்கிரûஸக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆட்சி அமைக்க அழைத்தால், அந்தக் கட்சி மறுக்காமல் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டு ஆட்சி அமைக்கும். காரணம், அணுசக்தி ஒப்பந்தப் பிரச்னையைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் தைரியம் நிச்சயமாகக் காங்கிரûஸ, பலப்பரீட்சைக்குத் தயாராக்கும்.
மதச் சார்பின்மையின் பெயரில் தனிப்பெரும் கூட்டணியான தமது கூட்டணியை ஆதரிக்காத இடதுசாரிகளையும், மாநிலக் கட்சிகளையும் ஆதரித்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்குக் கிடையாது என்பதால், தனது ஆட்சி கவிழ்ந்தால் எதிர்க்கட்சியில் அமரவும் அந்தக் கட்சி தயங்காது என்று நம்பலாம். அதனால் மூன்றாவது அணி அரசு என்பது காங்கிரஸ் சார்ந்ததாக இருக்க முடியாது.
ஒரு வேளை பாஜக அதுபோன்ற ஆதரவைத் தருமா என்றால், அதுவும் சந்தேகம்தான். காங்கிரஸýக்குப் பெரும்பான்மை இல்லை எனும்போது, பாஜகவின் பழைய கூட்டணிக் கட்சிகளான அதிமுக, பாமக, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் போன்றவை வலுவில் ஆதரவு தரத் தயாராக இருக்கும். இரண்டும் மூன்றும் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் கேட்காமலேயே ஆதரவு அளிக்கும். காரணம்? உடனடியாக மீண்டும் தேர்தலைச் சந்திக்கும் தைரியமும், பண பலமும் எந்தச் சிறிய கட்சிக்கும் கிடையாது என்பதுதான்.
இன்னொரு வாய்ப்பும் காணப்படுகிறது. ஒருவேளை, 1998-ல் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்தது போல 182 இடங்களோ அதற்கு மேலோ, காங்கிரஸýக்கோ, பாஜகவுக்கோ கிடைத்தால், அரங்கேறும் காட்சியே வேறுவிதமாக அமையும். மளமளவென்று அமைச்சர் பதவிப் பேரங்கள் நடத்தப்பட்டு ஆட்சி அமைந்து விடும்.
ஆனாலும், அந்த ஆட்சி எந்த அளவுக்கு நிலையானதாக இருக்கும் என்பதும் சந்தேகம்தான். ஏன், அதே 182 இடங்களை 1999-ல் பெற்ற வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும், வெறும் 145 இடங்களில் மட்டுமே 2004-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும் ஐந்து வருடங்கள் நிலையான ஆட்சியைத் தர முடிந்தது என்று கேட்கலாம்.
1999-ல் நாடு தழுவிய மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தார் என்பதையும், 2004-ல் இடதுசாரிகளின் முழுமையான ஆதரவு பெற்றிருந்ததுவரைதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நிலையானதாக இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்போது நிலைமை அப்படி இருக்கப் போவதில்லை. மத்திய அமைச்சர்களாக இருந்து, பதவி சுகம் கண்டுவிட்ட பல மாநில அமைச்சர்கள் இப்போது பிரதமர் பதவிக் கனவில் மிதக்கத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள்.
"உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அரசைப் பதவி நீக்கம் செய்ய உத்தரவாதம் தந்தால்தான் எனது ஆதரவு' என்று இப்போதே தாக்கீது தந்து விட்டார் சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தங்களுக்கு இன்னின்ன துறைகள் தரப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துப் பெற்றது திமுக. தனக்கு ரயில்வே அமைச்சர் பதவி தந்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடித்து 1999-ல் வாஜ்பாயிடம் கேட்டுப் பெற்றார் திரிணாமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி.
சரத் பவார், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ், மாயாவதி என்று பல ராஜ குருக்கள், போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதுபோல, ஒன்று கூடி முடிவெடுத்து ஒரு பிரதமரை அடையாளம் கண்டு முடிசூட்டக் காத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் கூடி வந்தால் அந்த மணிமுடியைத் தாங்களே அணிந்து கொள்ளவும் இவர்கள் தயக்கம் காட்டப் போவதில்லை. மாநிலக் கட்சித் தலைவர்களுக்குள் யார் பிரதமர் என்பதில் தீர்மானம் ஏற்படாவிட்டால், தோழர் பிரகாஷ் காரத் கூட மணிமுடி தரிக்கத் தயாராகலாம், யார் கண்டது? 1996-ல் இடதுசாரிகள் நழுவ விட்ட வாய்ப்பு 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகூடுமோ என்னவோ?
(தொடரும்)