முகப்பு
இந்தியா

அரசியல் அரங்கம்: சர்ச் லைட்

என்னதான் செய்கிறார் சமாஜவாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமர்சிங் என்று விசாரித்தால், மனிதர் திரைப்படத் தயாரிப்பில் படு மும்முரமாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இவருக்கு ஏன் இந்த திடீர் சினிமா ஆசை

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:49 PM
பகிர்:

என்னதான் செய்கிறார் சமாஜவாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமர்சிங் என்று விசாரித்தால், மனிதர் திரைப்படத் தயாரிப்பில் படு மும்முரமாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இவருக்கு ஏன் இந்த திடீர் சினிமா ஆசை என்று விசாரித்தால், எல்லாம் தனது நண்பரும் தலைவருமாக இருந்த சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் உண்மையான உருவத்தைத் துயிலுரித்துக் காட்டுவதற்காகத்தானாம்.

தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதன் மூலம் தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வது என்று அமர் சிங் முடிவெடுத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தத் திரைப்படத்துக்கு இணைத் தயாரிப்பாளராக இருப்பவர் நடிகை ஜெயப்ரதா என்பதிலும் ஆச்சரியம் இருக்க வழியில்லை. ஆச்சரியம் என்னவென்றால் திரைப்படம் தயாரிக்கப்படுவது இந்தியில் அல்ல. போஜ்புரி மொழியில் என்பதுதான்.

""சாது பிரசாத் என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் பின்னப்படும் இந்த போஜ்புரி மொழிப் படத்துக்கு தோக்கா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 2012 தேர்தலுக்கு முன்னால் இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம்'' என்று கூறும் அமர்சிங், முலாயம் சிங் யாதவால் தான் வஞ்சிக்கப்பட்ட சோகக் கதையைப் புலம்பித் தீர்க்கிறார்.

ஏற்கெனவே இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அமர்சிங். நக்சல் தீவிரவாதிகளின் ஆதரவாளராக "ஷேஷ் சங்காத்' என்கிற வங்காளி மொழிப் படத்திலும், டிம்பிள் கபாடியாவின் கணவராக "மும்பை மிட்டாய்' என்கிற மலையாள மொழிப் படத்திலும் நடிக்கும் அமர்சிங், போஜ்புரி மொழியில் படமெடுப்பது ஏனாம் தெரியுமா?

உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் போஜ்புரி மொழி, உத்தரப் பிரதேச பூர்வாஞ்சல் பகுதியில் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ஏறத்தாழ 23 மக்களவைத் தொகுதிகளையும், 117 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய பூர்வாஞ்சலில்தான் சமாஜவாதிக் கட்சியின் வாக்கு வங்கி அதிகம் என்பதால்தான் இந்த முடிவு.

இன்னொரு கொசுறு விஷயம். டிம்பிள் கபாடியாவின் ஜோடியாக அமர்சிங் நடிக்கும் "மும்பை மிட்டாய்' மலையாளத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா? அமர்சிங்கின் காரோட்டியாக வேலைபார்த்த கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர். இவர் அமர்சிங்குக்கு சிறுநீரகக் கோளாறு வந்தபோது தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்திருக்கிறார். ""அந்த டிரைவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. நான் என்ன முலாயம் சிங் யாதவா நன்றி மறப்பதற்கு?'' என்று உணர்ச்சி மேலிடப் பேசும் அமர்சிங்கை ஆசுவாசப்படுத்துகிறார் நடிகை ஜெயப்ரதா.

"நன்றி விசுவாசம்' என்று படத்துக்குப் பெயர் வைத்திருக்கலாமே, அமர்சிங்....!

சு னந்தா புஷ்கரிடம் அப்படி என்னதான் கவர்ச்சியோ தெரியவில்லை. அவரால் வசீகரிக்கப்படாத அரசியல் தலைவர்களே இல்லை போலிருக்கிறது. மக்களவையில், "சசிதரூர் ஏன் இன்னும் ராஜிநாமா செய்யத் தயங்குகிறார்?' என்று வீரவசனம் பேசிய மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் ஃபாரூக் அப்துல்லா எழுப்பும் கேள்வி இதுதான் - ""சுனந்தா எனது தோழி. அல்லது நண்பி என்று சொல்வதில் சசிக்கு ஏன் தயக்கம்? சுனந்தாவுடன் நட்புறவு வைத்துக் கொண்டிருப்பது தவறா என்ன? அதை மறைப்பதுதான் தவறு...''.

ஏன் சொல்ல மாட்டீர்கள் ஃபாரூக்ஜீ. கொஞ்ச நாள் முன்பு, சுனந்தா காஷ்மீரத்துக்கு வந்தால் அவரை மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக்குவோம் என்று நீங்கள் பகிரங்கமாகச் சொன்னது பலருக்கும் தெரியாது....

சு னந்தா பற்றிச் சொல்லிவிட்டு சசிதரூர் பற்றிச் சொல்லாமல் விட்டால், அது அவர்களது நட்புக்கு நாம் செய்யும் துரோகம்.

சமீபத்தில் தனது தொகுதியான திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்து இறங்கினார் முன்னாள் மத்திய வெளிவிவகாரத் துறை இணையமைச்சர் சசிதரூர். முதலில் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி வரவேற்பது என்று முடிவெடுத்திருந்த இடதுசாரிக் கட்சியினர் கடைசி நிமிடத்தில் தங்களது எதிர்ப்பைப் புதுமையான முறையில் வெளிப்படுத்தினர்.

வேறொன்றுமில்லை. ஐ.பி.எல். கொள்ளையை நினைவுபடுத்தும் விதமாகக் கிரிக்கெட் மட்டைகளை ஆட்டித் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். அதைக் கையசைத்து வாழ்த்திவிட்டுக் காரில் விரைந்தார் மக்கள் பிரதிநிதி!

நான் பன்னாட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறாரோ....!

முழு கட்டுரையைப் படிக்க →