முகப்பு
இந்தியா

பிரதமருக்கு எதிரான போராட்டம் உள்நோக்கம் கொண்டது: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி

புது தில்லி, டிச. 23: பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக பயணத்தின்போது சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:31 PM
பகிர்:

புது தில்லி, டிச. 23: பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக பயணத்தின்போது சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

 தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். இது தொடர்பாக "தினமணி' நிருபருக்கு நாராயணசாமி அளித்த பேட்டி:

 முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் பலம் தொடர்பாக அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் "முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் இரு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

 உச்ச நீதிமன்றமும் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பேச்சுவார்த்தை நடத்த இயலாது' என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

 இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுத்துவிட்டார். பிரதமரைச் சந்தித்த தமிழக, கேரள அரசியல் கட்சித் தலைவர்களிடமும் இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 அதன் பிறகும் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகக் கட்சிகள் சில கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன.

 முல்லைப் பெரியாறு பிரச்னையில் உண்மை நிலை தெரிந்தும், தமிழக அரசியல் கட்சியினர் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த முற்படுகின்றனர்.

 பிரதமரின் தமிழகப் பயணத்தின்போது கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்திருப்பது அரிசியல் உள்நோக்கம் கொண்டது; நியாயமற்றது. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரின் தமிழகப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

  பிரதமரை ஜெயலலிதா வரவேற்பாரா?

 பிரதமர் சென்னைக்கு வருகை தரும் போது மாநில ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், ராணுவத்தினர் ஆகியோர் சம்பிரதாயப்படி வரவேற்பார்கள். பிரதமர் மன்மோகன் சிங் தமிழகப் பயணத்தின்போது அவரை வரவேற்க முதல்வர் ஜெயலலிதா செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 அது மட்டுமின்றி பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது முதல்வர் சந்திப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது "இதற்கான பதிலை தமிழக முதல்வரிடம்தான் கேட்க வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.