முகப்பு
இந்தியா

பிடிவாதத்தால் ஆட்சியை இழப்பீர்கள்: காங்கிரஸ் கட்சிக்கு கட்கரி எச்சரிக்கை

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரியது 2ஜி அலைக்கற்றை ஏல ஊழல்தான்; இந்த விவகாரத்தை ஆராய நாடாளுமன்ற கூட்டுக்குழு

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

குவாஹாட்டி,ஜன.8: ""இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரியது 2ஜி அலைக்கற்றை ஏல ஊழல்தான்; இந்த விவகாரத்தை ஆராய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடாமல் தவிர்ப்பதிலேயே காங்கிரஸ் தலைமை பிடிவாதம் காட்டுகிறது. இதனால் ஆட்சியையே இழக்கப் போகிறது'' என்று எச்சரித்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி.

அசாம் தலைநகர் குவாஹாட்டில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை உரை ஆற்றிய கட்கரி தேசிய பிரச்னைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார். அடுத்து பாஜக தேசிய செயற்குழு விவாதிக்க வேண்டியவை குறித்து விரிவாகப் பேசினார்.

நிதின் கட்கரி கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் நிருபர்களுக்கு அனுமதி இல்லை. பின்னர் பத்திரிகைத் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் அதன் சாரத்தைத் தெரிவித்தார்.

நிதின் கட்கரி பேசியதாவது:

""காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி திட்டத்தில் வீடுகளை ஒதுக்கியதில் ஊழல், 2 ஜி அலைக்கற்றைகளை முதலில் வந்தவருக்கே முதலில் வாய்ப்பு என்ற முறையில் ஒதுக்கியதில் ஊழல் என்று அரசுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வருவாய் இழப்பு அரசுக்குத்தானே தவிர இப்படி இழக்க வைத்தவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்கு இதில் ஆதாயம் பார்த்துவிட்டார்கள்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவால் வலுவாக விசாரிக்க முடியாது என்பதால்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்கிறோம். சி.பி.ஐ. விசாரணையும் ஒரு வரம்புக்கு உள்பட்டதுதான். கடந்த ஓராண்டாக இந்த விவகாரம் பேசப்பட்டாலும் சி.பி.ஐ. இதை விசாரிக்க அக்கறையே காட்டவில்லை. உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்த பிறகே சி.பி.ஐ. செயல்படத் தொடங்கியது. இந்த நிலையில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் கணக்கே தவறு என்று அத் துறைக்குப் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஊழலை இப்படி அடுக்கடுக்காக மறைத்துக் கொண்டே போவது நல்லதல்ல; மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க இந்த 3 ஊழல்களில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 3 சதவீதத் தொகை சுருட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு சில மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டையே போட்டுவிடலாம். இதை விசாரிக்கத் தடை விதிப்பதில் அரசு காட்டும் பிடிவாதம் நெருக்கடி நிலை அமல் காலத்தை நினைவூட்டுகிறது. இதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

2ஜி அலைக்கற்றை ஊழலை இதுவரை நடந்த அனைத்து ஊழல்களுக்கும் அன்னை என்றே அழைக்கலாம். அந்த அளவுக்குப் பெரியது, தீவிரமானது. பிரதமர் யோக்கியமானவர், பொதுக்கணக்குக்குழு முன்னால் ஆஜராகத் தயாராக இருப்பவர் என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்னால் ஆஜராகத் தயங்குவது ஏன்?

ஊழல் சாம்ராஜ்யம்: இந்த ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருப்பவர் (சோனியா காந்தி) ஊழலுக்கு இடம்தரக்கூடாது, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஊழலை ஒழிக்க 5 அம்ச திட்டம் என்றெல்லாம் நாடகமாடுவது பயனைத் தராது. உங்களுடைய தேர்வில், நீங்கள் சொல்லி பதவிக்கு வந்தவர்கள்தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை மறைக்க முயற்சி செய்ய வேண்டாம்.

இந்த ஊழலில் முறைகேடு நடந்திருப்பது ஆதாரங்களுடன் தெரியவந்திருக்கிறது. யார் இதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதும் தெரிகிறது. அப்படியிருக்க அவர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து கைது செய்து உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு நடத்தி தண்டனை அளிப்பதை தடுப்பது எது?

விலைவாசி உயர்வு: மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் பொறுப்பற்ற நிர்வாகத்தாலும்தான் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. ஆன்-லைன் வர்த்தகம்,முன்பேர வர்த்தகம் என்று அத்தியாவசியப் பண்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் இடைத்தரகர்களால் சுருட்டப்படுகிறது. இதை அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு, சிவில் சப்ளை துறை நிலைமை கையை மீறிய பிறகு ஏற்றுமதிக்குத் தடை, இறக்குமதிக்குச் சலுகை என்று ஒப்புக்குச் செயல்படுகிறது.

அன்னிய நாட்டிலிருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்களும் இடதுசாரி தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களும் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வலுவான அரசியல் நடவடிக்கை தேவை. மத்திய அரசிடம் இந்த உறுதி இல்லை.

அயோத்தி தீர்ப்பு: அயோத்தியில் ஜன்மஸ்தானம் யாருக்கு உரியது என்ற வழக்கில் தீர்ப்பு வெளிவந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தீர்ப்பை சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஏற்று ராமருக்கு மிகப்பெரிய கோவில் கட்டும் நல்ல சூழல் ஏற்படும் என்று நம்புகிறோம்.

பாஜகவினர் நேர்மையாக இருக்க வேண்டும்: ஊழலைக் கண்டித்து நாம் பேசும்போது, நீங்கள் மட்டும் யோக்கியமா என்று பிற கட்சியினர் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் நிலையை கட்சியைச் சேர்ந்த முதல்வர்களோ, அமைச்சர்களோ, நிர்வாகிகளோ, தொண்டர்களோ ஏற்படுத்திவிடக்கூடாது. நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்து நாட்டை முன்னேற்றத்தான் நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம் என்பதை அனைவரும் நினைவில் வைக்க வேண்டும்.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரித்து அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே கட்சியின் நிலை. அதில் எந்த மாற்றமும் இல்லை. யாருக்கும் இதில் விதிவிலக்கும் இல்லை.

பயங்கரவாதம்: பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு உறுதி இல்லை என்பதையே அவ்வப்போது அக் கட்சி தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் உணர்த்துவது வருத்தத்தைத் தருகிறது. நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அப்சல் குருவின் சகா ஷெüகத் குருவின் சிறைவாசம் முடியும் முன்னரே ""நல்ல நடத்தைக்காக'' விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

ஆளும் கட்சிக்குள்ளேயே நக்ஸல்களுடன் குலாவுகிறவர் முக்கிய பதவியில் இருக்கிறார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்திய அரசு ராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமித்திருக்கிறது என்று கூறும் எழுத்தாளருக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே பலர் பாராட்டும் புகழுரையும் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இன்னும் சிலரோ இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு போன்ற வன்செயல்களில் ஹிந்து தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் தலைமைக்கே மறைமுக ஆதரவாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் 2004 முதல் எத்தனை தாக்குதல்கள் நடந்தன, அவை தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், எத்தனை சம்பவங்கள் தொடர்பாக வழக்கு நடந்து முடிந்தது, அவற்றில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை வெளியிடட்டும்' என்றார் நிதின் கட்கரி.

முழு கட்டுரையைப் படிக்க →