டேம் 999: முடங்கியது நாடாளுமன்றம்
முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போல் சித்திரிக்கும் "டேம் 999' ஆங்கிலத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையிலும்....
புது தில்லி, நவ. 23: முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போல் சித்திரிக்கும் "டேம் 999' ஆங்கிலத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
சர்ச்சைக்குரிய அந்தப் படத்தை வெளியிடுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை புதன்கிழமை காலை கூடியவுடன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு எழுந்து நின்று "தினமணி'யில் செவ்வாய்க்கிழமை வெளிவந்த "டேம் 999' செய்தியைக் காண்பித்தார். அதையடுத்து, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அ.தி.மு.க. மக்களவைத் தலைவர் தம்பிதுரை, ம.தி.மு.க. உறுப்பினர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நடராஜன் உள்பட அவையில் இருந்த அனைத்து தமிழக உறுப்பினர்களும் "படத்தைத் தடை செய்ய வேண்டும்' என்று கோஷமிட்டனர்.
மக்களவைத் தலைவர் மீரா குமாரின் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷமிட்டனர்.
இதனிடையில் விலைவாசி உயர்வு, கறுப்புப் பண விவகாரம் குறித்து ஒத்திவைப்புத் தீர்மானத்தை வலியுறுத்தி இடதுசாரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
வெங்காய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
தனித் தெலங்கானாவை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததைக் கண்டித்து அவையின் மத்தியப் பகுதிக்கு வந்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கோஷமிட்டார். அதனால், ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமரிடம் முறையீடு: மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தி.மு.க. நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலுவை அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துப் பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் உடன் இருந்தார்.
"டேம் 999' படம் குறித்து "தினமணி' செய்தியைப் பிரதமரிடம் டி.ஆர். பாலு காண்பித்து விளக்கினார்.
"முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கிறது. அணை உடைவதைப் போல் காண்பிக்கும் காட்சி தமிழக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. படத்தைத் திரையிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று பாலு வேண்டுகோள் வைத்தார்.
"நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை மன்மோகன் சிங் அழைத்து உணர்வு பூர்வமான இந்த விவகாரம் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்' என்றும் பாலு தெரிவித்தார்.
மாநிலங்களவை: மாநிலங்களவை தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர்கள் திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் "தினமணி'யை உயர்த்திக் காட்டி "பேன் தி மூவி டேம் 999' என்று கோஷமிட்டனர்.
விலைவாசி உயர்வு, கறுப்புப் பண விவகாரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வு குறித்து ஒரு அறிக்கையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்தார். எனினும் அமளி தொடர்ந்தது.
கறுப்புப் பண விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து எழுந்த கூச்சல் குழப்பத்தால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
இறுதியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இரண்டாம் நாளாக எந்த அலுவலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வத்துடன் விவரம் கேட்ட மற்ற மாநில உறுப்பினர்கள்
"டேம் 999' படம் குறித்த செய்தி வெளியான "தினமணி' நாளேட்டை (படம்) தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தனர்.
செய்தித்தாளைக் காட்டி அவர்கள் பிரச்னை எழுப்பியதையடுத்து, இதர மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் "என்ன விவகாரம்?' என்று தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, கோவா சென்றுள்ளார்.
அவர் தில்லி திரும்பியதும், திரைப்படத்தைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.