மறு விற்பனை சந்தைக்குள் நுழைந்தது பி.எம்.டபிள்யு
குர்கான் (ஹரியாணா), நவ. 25: பயன்படுத்தப்பட்ட பி.எம்.டபிள்யு கார்களை மறுவிற்பனை செய்யும் பணியை அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இவை, முழு தரப் பரிசோதனைக்குப் பிறகு, நிறுவன உத்தரவாதத்துடன் விற்பனைக்குக்
குர்கான் (ஹரியாணா), நவ. 25: பயன்படுத்தப்பட்ட பி.எம்.டபிள்யு கார்களை மறுவிற்பனை செய்யும் பணியை அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இவை, முழு தரப் பரிசோதனைக்குப் பிறகு, நிறுவன உத்தரவாதத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியை அடுத்துள்ள குர்கானில் வியாழக்கிழமை மறுவிற்பனையைத் தொடங்கி வைத்து, அதன் இந்திய நிறுவனத் தலைவர் ஆன்ட்ரியாஸ் ஷாஃப் செய்தியாளர்களிடம் கூறியது:
பி.எம்.டபிள்யு. கார்களை இதுவரை பயன்படுத்தாதவர்களை இலக்காகக் கொண்டு இந்த மறு விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்ட பி.எம்.டபிள்யு கார்கள் அனைத்தும், பி.எம்.டபிள்யு பிரீமியம் செலக்ஷன் என்ற பெயரில் மறு விற்பனைக்குக் கிடைக்கும்.
Advertisement
முதல் கட்டமாக இவை, குர்கான் பேர்ட் ஆட்டோமோட்டிவ், லூதியானா கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ், தென் மும்பாய் இன்ஃபினிட்டி கார்ஸ், புணே பவரியா மோட்டார்ஸ், பெங்களூரு நவ்னித் மோட்டார்ஸ், குண் எக்ஸ்குளுசிவ் சென்னை மற்றும் ஹைதராபாத் விற்பனை மையங்களில் கிடைக்கும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இது படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
5 ஆண்டுகளுக்குள் அல்லது 1.20 லட்சம் கிலோ மீட்டர்கள் இயக்கப்பட்ட கார்களை வாங்கி, அனைத்து தரப் பரிசோதனைகளையும் செய்து, பழுது நீக்கி விற்பனை செய்கிறோம். 24 மாதங்களோ அல்லது 2 லட்சம் கிலோ மீட்டர் பயன்பாடோ எது முதலில் வருகிறதோ அதுவரை உத்தரவாதம் வழங்குகிறோம். மேலும், 13 சதவீத வட்டியில் கடன் திட்டங்களை வழங்க இருக்கிறோம். இது மற்ற இடங்களில் 18 சதவீதமாக இருக்கிறது.
புதிய கார்களுக்கு இருப்பதைப் போன்ற பாதுகாப்பு அம்சங்களோடு இவை விற்பனை செய்யப்படுவதால், பி.எம்.டபிள்யு கார்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். நாடு முழுவதும் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யு மறு பயன்பாட்டுக் கார்கள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் உடனுக்குடன் கிடைக்கும் என்றார்.