இலங்கைப் பயணத் திட்டத்தை மாற்ற எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்
புது தில்லி, ஏப். 15: இலங்கையில் மேற்கொள்ளும் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர். இதைப் போல் இலங்கை அதிபர் ரா
புது தில்லி, ஏப். 15: இலங்கையில் மேற்கொள்ளும் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.
இதைப் போல் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி சாப்பிடும் நிகழ்ச்சியையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கையில் இந்திய நிதியுதவிடன் நிறைவேற்றப்படும் திட்டங்களைப் பார்வையிட நான்கு நாள் பயணமாக இந்திய எம்.பி.க்கள் குழுவினர் திங்கள்கிழமை மாலை இலங்கைப் புறப்படுகின்றனர்.
இந்திய எம்.பி.க்களின் பயணத் திட்டம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாய் ஞாயிற்றுக்கிழமை விளக்கினார். இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக தவிர இலங்கை செல்லும் 12 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏப்ரல் 18-ம் தேதி இலங்கை ரயில்வே திட்டங்களைப் பார்வையிடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்துவிட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பார்வையிடும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
ஏப்ரல் 21-ம் தேதி புறப்படும் முன்பு காலை சிற்றுண்டியுடன் அதிபர் ராஜபட்சவுடன் நடைபெறும் சந்திப்பை 20-ம் தேதி மாலைக்கு மாற்ற வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள். தமிழக எம்.பி.க்களின் இந்தக் கருத்துக்கு பாஜக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் அதரவு தெரிவித்தனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் உறுப்பினர்கள் கூறியது:
சுஷ்மா ஸ்வராஜ், (பாஜக): வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிடுவதைவிட முகாம்களைப் பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். மாணிக்கன் தோட்ட முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழுவினர் பார்வையிடும் வகையில் மாற்றி அமைக்க வலியுறுத்தினோம். இதை அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள். அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டிப்பாக இந்தப் பயணத்தில் இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம்.
டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்): மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களைப் பார்வையிடும் வகையில் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். மாணிக்கன் தோட்டத்தில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களைச் சந்திக்கும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்): காங்கேசன் துறைமுகம், ராணுவ முகாம்கள் ஆகியவற்றை பார்வையிட வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளோம். இவற்றை எல்லாம் பார்வையிட எம்.பி.க்கள் குழு அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் வாக்குறுதி அளித்தார்.
சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்): மாணிக்கன் தோட்ட முகாம்கள் உள்ள பகுதியில் கோடை காலத்தில் மழை பெய்து வருவதால் அந்த முகாம்களில் உள்ள சுமார் 6 ஆயிரம் பேர் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அந்த முகாம்களில் உள்ளவர்கள் ஆறு இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையையும் பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
மாணிக் தாகூர் (காங்கிரஸ்): இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் 21-ம் தேதி காலை நடைபெறும் சிற்றுண்டிச் சந்திப்பில் மாற்றம் செய்யது 20-ம் தேதி மாலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இந்திய எம்.பி.க்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாய் வாக்குறுதியளித்துள்ளார். இந்திய எம்.பி.க்கள் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு தில்லியில் இருந்து இலங்கைக்குப் புறப்படுகின்றனர். அதற்கு முன்புதான் அவர்களின் இறுதி கட்ட பயணத் திட்டம் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆகையால் இந்திய எம்.பி.க்களின் பயணத் திட்டம் திங்கள்கிழமை மாலைதான் தெரியவரும்.