முகப்பு
இந்தியா

அணைக்கு ஆபத்து இல்லை: தமிழகம் விளக்கம்

முல்லைப் பெரியாறு அணைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் தமிழகம் சார்பில் திங்கள்கிழமை விளக்கமளிக்கப்பட்டது...

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:41 PM
பகிர்:

புது தில்லி, ஜன. 2: முல்லைப் பெரியாறு அணைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் தமிழகம் சார்பில் திங்கள்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

 புதிய அணை கட்டப்பட்டால், அதை நிர்வகிப்பது தொடர்பான கருத்துகளை இரு மாநிலங்களும் வெள்ளிக்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தக் குழு உத்தரவிட்டது. இதற்குத் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

 அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் அதன் தலைவர் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் திங்கள்கிழமை கூடியது. அப்போது தமிழகத்தின் சார்பில் வழக்குரைஞர்கள் குரு கிருஷ்ணகுமார், உமாபதி, பொதுப்பணித் துறை செயலாளர் சாய் குமார், தமிழ்நாடு நீர்வளத் துறை ஆணையத்தின் தலைவர் சுப்பிரமணியம், செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

 கேரளத்தின் சார்பில் வழக்குரைஞர்கள் ராஜீவ் தவன், மோகன் கதார்கி, கூடுதல் செயலாளர் ஜெயகுமார், முல்லைப் பெரியாறு சிறப்புக் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் வில்சன், லதிகா ஆகியோர் பங்கேற்றனர்.

 கேரளத்தின் வாதம்: முல்லைப் பெரியாறு பிரச்னைக்குப் புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு. அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு 999 ஆண்டுக் காலம் அதைப் பாதுகாப்பது இயலாது. பழைய அணை பாதுகாப்பாக உள்ளது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க இயலாது.

 பழைய அணையில் வெடிப்பு ஏதும் வெளியே காணப்படவில்லை. இருந்தாலும் அணை உள்ளே பலவீனமாக உள்ளது. புதிய அணையைக் கட்டுவது சாத்தியம் என்று முடிவானால் பழைய அணையின் பாதுகாப்பு குறித்து பயப்படத் தேவையில்லை.

 புதிய அணையைக் கட்ட கேரள அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கத் தேவையில்லை.

 புதிய அணையைக் கேரள அரசின் நிதியிலிருந்து கட்டுவதால் அதன் முழுக் கட்டுப்பாடு கேரள அரசிடம் இருக்கும் என்று கேரளம் சார்பில் வாதிடப்பட்டது.

 தமிழகத்தின் வாதம்: "புதிய அணையே தீர்வு' என்ற கேரள அரசின் வாதத்துக்கு தமிழக அரசு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆட்சேபம் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதால் புதிய அணை கட்ட வேண்டிய அவசியமே எழவில்லை.

 அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு தேவையற்ற வதந்தியைப் பரப்பி வருகிறது. புதிய அணையைக் கட்டுவது தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும். நில நடுக்கத்தால் அணையில் வெடிப்பு ஏதும் இல்லை என்று கேரள அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

 கேரள அரசு குறிப்பிடும்படி அணை வெடித்து சிதறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று குமார் கூறினார்.

 நீதிபதி ஆனந்த் உத்தரவு: இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த குழுவின் தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான ஆனந்த் பிறப்பித்த உத்தரவு:

 புதிய அணையைக் கட்டினால் அணையின் உரிமை, கட்டுப்பாடு, தண்ணீர்க் கட்டுப்பாடு ஆகிய மூன்று வகை நிர்வாக அதிகாரம் வருகிறது. இதில் புதிய அணைக்கான பாதுகாப்பு, பராமரிப்பு உள்பட இந்த மூன்று வகையான நிர்வாகத்தையும் இரு மாநில அரசுகளும் இணைந்து மேற்கொள்ள தயாரா என்று வரும் வெள்ளிக்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

 அதன் பின்னர் இரு மாநில அரசுகளும் எந்தவித அறிக்கையையும் தாக்கல் செய்ய முடியாது என்றும் அவர் உத்தரவிட்டார்.

 நிபுணர் குழு அறிக்கை: நில அதிர்வால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து சி.டி. தத்தே, மேத்தா ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. அந்த அறிக்கை சீலிடப்பட்ட ஓர் உறையில் ஐவர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது செவ்வாய்க்கிழமை ஐவர் குழுவில் விவாதம் நடைபெறும்.

 

 "நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும்'

 நில அதிர்வுகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து, நிபுணர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கேரள அரசு ஒரு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது. அதன் விவரம்:

 ""இந்த அணையை ஆய்வு செய்ய வந்த நிபுணர்கள் சி.டி. தட்டே, மேஹதா ஆகியோர் தமிழக அதிகாரியுடன் தனி அறையில் ஆலோசனை நடத்தினர்.

 அணையில் ஒன்பது இடங்களில் துளைகள் போட்டு ஆய்வு நடத்த வேண்டிய அவர்கள் ஒரே இடத்தில் மட்டும் துளை போட்டு ஆய்வு நடத்தினார்கள். அணையில் பழுதுபார்க்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதிலும் அணையைப் பலப்படுத்த தமிழக அதிகாரிகளுக்கு நிபுணர் குழு சில யோசனைகளைத் தெரிவித்தது. இது கேரள அரசின் நலனுக்கு எதிரானது. இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 நிபுணர் குழு சீலிட்ட உறையில் உள்ள அறிக்கையில் நில அதிர்வால் அணைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்டுள்ளதாகத் தெரிகிறது. இது தமிழகத்துக்குச் சாதகமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.