நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: தமிழகத்திலிருந்து வரும் விண்ணப்பங்கள் குறைவு
மத்திய கலாசார அமைச்சகத்தின் சார்பில், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் பெற தமிழகத்தில் இருந்து சொற்ப எண்ணிக்கையிலான கலைஞர்களே விண்ணப்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கலாசார அமைச்சகத்தின் சார்பில், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் பெற தமிழகத்தில் இருந்து சொற்ப எண்ணிக்கையிலான கலைஞர்களே விண்ணப்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு மாநிலங்களுக்கான தென் மண்டல கலாசார மையம் தஞ்சாவூரில் இருந்தும், கலாசார அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழக கலைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், மாதம் ரூ. 4,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
"ஒய்வூதியம் பெற, பிற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆனால், தமிழகத்திலிருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை இரு இலக்க எண் அளவில் மட்டுமே உள்ளது' என்று கலாசார அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
நாடக, தெருக்கூத்து கலைஞர்கள், மிருதங்கம் வாசிப்பவர்கள், தப்படிப்பவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் என பலருக்கும் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெற 58 வயது கடந்த நலிந்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். கலை, பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட சேவை செய்திருப்போருக்கு இத்திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்காக, தஞ்சாவூரில் மத்திய கலாசார அமைச்சகத்தின் தென் மண்டல கலாசார மையம் செயல்பட்டு வருகிறது.
அண்மையில் அந்த மையத்தில் நடைபெற்ற வல்லுநர் குழு ஆய்வின்போது, ஓய்வூதியம் கோரி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்ததும், மகாராஷ்டிரத்திலிருந்து மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வந்ததும் தெரியவந்தது.
கலாசார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஓய்வூதியத்துக்கான விண்ணப்பத்தை புது தில்லியில் உள்ள கலாசார அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். ஆய்வுக்குப் பிறகு தகுதிய உடைய நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
அதற்கான விவரங்கள் கலாசார அமைச்சகத்தின் ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹஸ்ரீன்ப்ற்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளன.
ஓய்வூதியதிற்கான தொகை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு, அங்கிருந்து பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கலைஞர் இறக்க நேரிட்டால், அந்தத் தொகை அவரது மனைவிக்கு வழங்கப்படுகிறது' என்றார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.