இந்தியா

கம்ப ராமாயணத்தில் இளையர்களுக்குத் தேவையான விஷயங்கள் இருக்கின்றன: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக நிகழ்ச்சி!

இன்றைய இளையர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் கம்ப இராமாயணத்தில் இருக்கின்றன என்று நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா.தினகரன் கூறியிருக்கிறார். அதனால் இலக்கியங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி

இன்றைய இளையர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் கம்ப இராமாயணத்தில் இருக்கின்றன என்று நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா.தினகரன் கூறியிருக்கிறார். அதனால் இலக்கியங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நாள் முழுதும் நடைபெற்ற கம்பன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தினகரன் அவ்வாறு குறிப்பிட்டார். இராமன் எவ்வாறு பெற்றோரின் கட்டளையை ஏற்றுக் காட்டுக்குச் சென்றான் என்பதைச் சுட்டிய அவர் பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பளிப்பதற்கு இது சிறந்த உதாரணம் என்றார்.

உரையரங்கம்

உரையரங்கம், கவியரங்கம், பட்டி மன்றம் என மூன்று முப்பெரும் நிகழ்வுகளாக நடைபெற்ற கம்பன் விழாவில். கம்பன் காப்பியத்தில் தனிப் புலமை பெற்ற இலங்கையின் கம்பவாரிதி ஜெயராஜ் “கம்பன் கண்ட மானுடம்” எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். தலைமைப் பண்புகள் சிறு வயதிலிருந்தே வளர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இராமனின் சிறுவயது நடவடிக்கைகளை கம்பன் விவரிப்பதை எடுத்துக் காட்டினார்.

தமிழகத்தின் பொற்கிழிக் கவிஞர் சொ. சொ. மீ. சுந்தரம் “மும்மடங்கு பொலிந்தன” எனும் தலைப்பில் இராவணன் பற்றி உரையாற்றினார். இராவணன் மிகச் சிறந்த தலைவன் என்றும் அவன் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதால்அவீழ்ந்தான் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்று அவர் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டிக் கூறினார்.

மலேசியாவில் கம்பன் விழா நடத்திப் புகழ்பெற்ற கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ எம். சரவணன் “கம்பனும் கண்ணதாசனும்” எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். கண்ணதாசனின் கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றில் எங்கெங்கு கம்பனின் தாக்கம் வந்துள்ளது என்பதை அவர் சுவையாக விளக்கினார். உரையரங்கத்திற்கு சிங்கப்பூரின் தமிழ்க் கடல், எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமையேற்றார்.

கவியரங்கம்

பிற்பகல் உணவுக்குப் பிறகு பொற்கிழிக் கவிஞர் சொ. சொ. மீ. சுந்தரம் தலைமையில்  “பாத்திரங்கள் பேசினால்” எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது.  அதில் உள்ளூர்க் கவிஞர்கள் பங்கேற்றனர். கூனி பற்றிக் கவிஞர் இன்பாவும், சுக்கிரீவன் பற்றிக் கவிஞர் கி. கோவிந்தராசுவும், வாலி குறித்துக் கவிஞர் ந.வீ. விசயபாரதியும் சூர்ப்பணகை பற்றிக் கவிஞர் மாதங்கியும் இந்திரஜித் குறித்துக் கவிஞர் இராம. வயிரவனும், கும்பகர்ணன் பற்றிக் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவும் வீடணன் குறித்துக் கவிஞர் அ.கி. வரதராசனும் சுமித்திரை பற்றிக் கவிஞர் பார்வதி பூபாலனும் கவிதை பாடினர். இவர்கள் அனைவரும் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான கவிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

பட்டி மன்றம்

தேநீர் இடைவேளைக்குப் பிறகு அரங்கேறிய பட்டி மன்றத்திற்கு கம்பவாரிதி ஜெயராஜ் நடுவராக இருந்தார். "தம்பியரில் சிறந்தவன் பரதனா? இலக்குவனா?” எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் உள்ளூரின் பிரபல பேச்சாளர்கள் பங்கேற்றனர். பரதன் அணியில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனும் முனைவர் இரத்தின வேங்கடேசனும் பேசினர். இலக்குவனுக்காக முனைவர் ந. செல்லக்கிருஷ்ணனும் திரு. சுப. அருணாசலமும் வாதிட்டனர். இறுதியில் தீர்ப்பளித்த கம்பவாரிதி ஜெயராஜ், இலக்குவன் 14 ஆண்டுகள் தூங்காமலும் அண்ணனை விட்டுப் பிரியாமலும் இருந்தாலும் பரதன் படிப்படியாக உயர்நிலையை அடைகிறான் என்பதைச் சுட்டினார். அரச பதவியை மறுத்ததன் மூலம் இராமனுக்குச் சமமாக இருந்த பரதன், அதை அண்ணனுக்கே திருப்பித் தர வேண்டும் என்று காட்டுக்குச் சென்றபோது ஆயிரம் இராமருக்கு இணையானவன் என்று குகனால் புகழப்டுகிறான். பின்னர் 14 ஆண்டு கழித்து இராமன் வரவில்லை எனக் கருதி தீயில் பாய்ந்து உயிரைவிடத் துணிகிறான். அப்போது இராமனைப் பெற்ற கோசலையே பல இராமருக்கு இணையானவன் என பரதனைப் புகழ்கிறான். இறுதியில் இரமனே, பரதன் இலக்குவனைவிடச் சிறந்தவன் என்று கூறியதைச் சுட்டி அதையே தீர்ப்பாக அளித்தார் கம்பவாரிதி.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற் கல்லூரி அரங்கத்தில் காலை 10.00 மணிக்கு சி. குணசேகரனின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் எழுடததாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் சுப. அருணாசலம் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார். இரவு மணி 7.30க்கு விழா நிறைவு பெற்றவுடன் துணைச் செயலாளர் திரு. இராம. வயிரவன் நன்றி கூறினார்.

கம்பன் கவிச்சுவை பருக வந்திருந்த பார்வையாளர்கள் சுமார் 250 பேரும் ஒட்டுமொத்தமாக விழாவைப் பாராட்டினர். இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துமபடியும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT