முகப்பு
இந்தியா

உயர் கல்வி முடித்த பெண்கள் ஜீவனாம்சம் கோர முடியாது: மும்பை குடும்ப நீதிமன்றம் அதிரடி

உயர்கல்வி முடித்த, திருமணமான பெண்கள் வேலைக்குப் போகாமல் இருந்து கொண்டு, கணவரிடம் ஜீவனாம்சம் கோர

Updated On : 2 ஜூன் 2015, 1:12 am IST
பகிர்:

உயர்கல்வி முடித்த, திருமணமான பெண்கள் வேலைக்குப் போகாமல் இருந்து கொண்டு, கணவரிடம் ஜீவனாம்சம் கோர உரிமையில்லை என்று மும்பை குடும்ப நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
 மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது கணவர் வழக்கு தொடுத்துள்ளார்.
 இந்நிலையில், பொறியாளராகப் பணியாற்றும் கணவர், தனக்கு இடைக்கால ஜீவனாம்சமாக ரூ.25,000 அளிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அந்தப் பெண் மும்பை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 இந்த மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவரது கணவர், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதியே தனது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதன் பிறகு தாணே, அந்தேரி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிறுவனங்களில் மனைவி பணியாற்றியுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் சேருமாறு பலமுறை கேட்டுக் கொண்டும் அவர் மறுத்ததாலேயே, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக அந்தக் கணவர் தெரிவித்தார்.
 இந்த மனு தொடர்பாக சனிக்கிழமை தீர்ப்பளித்த குடும்ப நீதிமன்ற முதன்மை நீதிபதி டாக்டர் லக்ஷ்மி பி.ராவ் கூறியதாவது:
 உயர்கல்வி முடித்தப் பெண்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் அமர்ந்து கொண்டு ஜீவனாம்சம் கேட்பதற்காக ஹிந்து திருமணச் சட்டத்தின் 24ஆவது பிரிவு ஏற்படுத்தப்படவில்லை.
 நல்ல பணியில் உள்ள இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது. வழக்கு முடிவடைந்த பிறகு நிரந்தர ஜீவனாம்சம் பெறவும் அவருக்கு உரிமையில்லை. பிரிந்து சென்று பல மாதங்களுக்குப் பிறகே அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர் தனது சம்பளக் கணக்கை நீதிமன்றத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.