முகப்பு
இந்தியா

வழக்கறிஞர்கள் கட்டாயம் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் கட்டாயம் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது, நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட கூடாது என்றது.

Updated On : 27 நவம்பர், 2015 at 7:16 PM
பகிர்:

வழக்கறிஞர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் கட்டாயம் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது, நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட கூடாது என்றது. மேலும், ஒரு மாதத்திற்குள் வழக்கறிஞர் சங்கங்கள் இதுகுறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வழக்கறிஞர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க வலியுறுத்தி தில்லியைச் சேர்ந்த 'காமன் காஸ்' என்ற என்.ஜி.ஓ. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர், வழக்கறிஞர்கள் கட்டாயமாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்க கூடாது என்றனர்.

Advertisement

வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்று அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பையும் நீதிபதிகள் சுட்டிகாட்டினர்.

என்.ஜி.ஓ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 2002 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யவும், நீதிமன்றத்தை புறக்கணிக்கவும் உரிமை இல்லை என்றார்.  வேலைநிறுத்ததில் பங்கேற்க மறுக்கும் வழக்கறிஞர்களை கட்டாயப்படுத்தவும் கூடாது என வலியுறுத்தியுள்ளது என்றார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆஜரான, ராம் ஜெத்மலானி, வேலைநிறுத்தம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்றார். எனினும், வழக்கறிஞர்கள் தங்களுக்குள் பேசி தீர்வு காணலாம் என்றார்.

இதைத்தொடர்ந்து, ஒரு மாத காலத்துக்குள் வழக்கறிஞர் சங்கங்கள் இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ரூ. 2 கோடிக்குள்பட்ட சிவில் வழக்குகள் அனைத்தும் இனிமேல் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றம் நிறைவேற்ற சட்டத் திருத்தத்தை எதிர்த்து தில்லி வழக்கறிஞர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை எதிர்த்து  'காமன் காஸ்' என்ற என்.ஜி.ஓ. வழக்கு தொடர்ந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.