முகப்பு
இந்தியா

கேரள கோயில் விபத்து: பலி 109 ஆக உயர்வு; 6 பேர் மீது வழக்குப் பதிவு

கொல்லம் புற்றிங்கல் தேவி கோயில் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 109 பேர் உயர்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 ஏப்ரல், 2016 at 12:37 PM
பகிர்:

கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள புற்றிங்கல் தேவி கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 109 பேர் உயர்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் அருகே பரவூரில் உள்ளது 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புற்றிங்கல் தேவி கோயில். இந்தக் கோயிலில் கடந்த 7 நாள்களாக திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளான சனிக்கிழமை இரவு போட்டிபோட்டுக் கொண்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அப்போது சில பட்டாசுகள், மற்றோர் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கு இடையே விழுந்து வெடித்தன. இதையடுத்து ஏற்பட்ட விபத்தில் பலர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

Advertisement

ஏற்கெனவே 106 பேர் இறந்த நிலையில், திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூவர் இன்று உயிரிழன்தனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸார், கோயில் நிர்வாகிகள், பட்டாசு வெடிப்பதற்கு ஒப்பந்தம் எடுத்த சுரேந்திரன், கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது கொலை முயற்சி, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் வெடிப்பொருள் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக 5 பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிகிறது. எனினும் அவர்கள் யார் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஏடிஜிபி (குற்றப் பிரிவு) எஸ்.அனந்தகிருஷ்ணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பலர் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

இந்த விபத்தில் காயமடைந்த 383 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அரசு மருத்துவக் குழுவினர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று, நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.