இந்தியா

மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளாதார ரீதியில் அதிகாரம்

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளாதார ரீதியில் அதிகாரமளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
பல்வேறு பணிகளில் சிறப்பாக விளங்கும் மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் ஆதாரத்தை வழங்கி ஊக்குவிக்கும் அரசு, பொதுத் துறை, அரசு சாரா அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 2016-17 ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தலுக்கான விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கையில், அவர்களுக்கான வேலைவாய்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அரசுப் பணிகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தேசிய திறன் மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைவர்.
பொதுப் போக்குவரத்து, அரசுக் கட்டடங்கள் போன்றவற்றை மாற்றுத்திறனாளிகள் எளிமையான வகையில் அணுகுவதை மத்திய அரசின் "அணுகத்தக்க இந்தியா' பிரசார இயக்கம் உறுதிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கையில் பொது, தனியார் துறைகளும் பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, அதை சீர்படுத்தும் முயற்சியில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலை நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல பெரிய மற்றும் தீராத நோய்கள் அல்லது திறனைக் குன்றச் செய்யும் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கும். மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு ஆகியவற்றின் போதும், குழந்தை பிறந்த பிறகு போடும் தடுப்பூசிகளையும் சரியான காலத்தில் பயன்படுத்தும் விழிப்பு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். இதில் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது.
ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித்தன்மை உள்ளது. அதை உணர்ந்து அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து ஊக்குவிப்பதில்தான் அவர்களின் சக்தி, எதிர்காலம் போன்றவை அடங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளும் சூழலையும் அதிகாரமளித்தலையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். இதுவே அவர்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.
இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், இணை அமைச்சர்கள் கிரிஷண் பால் குர்ஜர், ராம்தாஸ் அதாவலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தில் உள்ள 10 பேர் உள்பட 68 பேருக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ஆகியோர் வழங்கினர்.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவையை சிறப்பாக வழங்கியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த சத்தீஸ்கர் மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியும், பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன், பெங்களூரில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் டி.அருண் ராஜ், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் பெங்களூர் நகரவாசியுமான இன்ஃபோசிஸ் நிறுவன அலுவலர் ரஞ்சினி ராமானுஜம் (80% காது கேட்புத் திறன் குறைபாடு மிக்கவர்) உள்ளிட்டோரும் அடங்குவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT