இந்தியா

ரூபாய் நோட்டு விவகாரம்: நிதீஷ் குமார் - சரத் யாதவ் இடையே கருத்து முரண்பாடு

DIN

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தில் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாருக்கும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவுக்கும் இடையே கருத்து முரண்பாடு நிலவி வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்று நிதீஷ் குமாரும், எதிர்ப்பு தெரிவித்து சரத் யாதவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால் அக்கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய தனதா தளக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நிதீஷ் குமார் பேசியதாவது:
இந்தியாவைப் பொருத்தவரையில், கருப்புப் பணம் என்பது நீண்டகாலமாக ஒழிக்க முடியாத நோயாக இருந்து வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கருப்புப் பணத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தையும் நான் பார்க்கிறேன்.
இது ஒரு தொடக்கம்தான். இந்த ஒரு நடவடிக்கையால் மட்டுமே கருப்புப் பணத்தை முழுமையாக ஒழித்துவிட முடியாது. கருப்புப் பணத்துக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது.
கருப்புப் பணம், ரொக்கமாக ஓரளவு மட்டும்தான் உள்ளது. பெரும்பாலானவை தங்கமாகவும், வைரமாகவும், வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் முதலீடாகவும் மாற்றப்பட்டுவிட்டன. எனவே, அவற்றை மீட்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்றார் நிதீஷ் குமார்.
நிதீஷுடன் மாறுபட்ட சரத் யாதவ்: இதனைத்தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், நிதீஷ் குமாரின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டு பேசினார். அவர் பேசியதாவது:
ரூ.8.5 லட்சம் கோடி வாராக் கடனால் திவாலாகி வரும் வங்கிகளை மீட்பதற்காகவே ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளார். இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த நாடே வரிசையில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இரண்டு பெரிய தலைவர்கள் முரண்பட்டு நிற்பது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணியா? நிதீஷ் பதில்

பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்துக்கொள்ளும் எனக் கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே; பிகாரில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியுடனான கூட்டணியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று நிதீஷ் குமார் தெரிவித்தார்.
"ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து நிதீஷ்குமார் கூறியதாவது:
ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதற்காகதான், இந்த நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். இதற்கு நீங்கள் எந்த அர்த்தம் கற்பித்தாலும் அதுகுறித்து எனக்கு கவலையில்லை.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்துக்கொள்ளும் என ஊகங்கள் வெளியாகின்றன. இது, மக்களைக் குழப்பமடையச் செய்வதற்கான உத்தியாகும். இந்தச் செய்தியில் துளியளவும் உண்மை இல்லை. லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியுடனான கூட்டணியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கூட்டணி பிகாரில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்றார் நிதீஷ் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT