பனிப்போர் ஓய்ந்தது: நஜீப் ஜங்கை சந்தித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
தில்லி துணை நிலை ஆளுநராக இருந்த நஜீப் ஜங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று காலை அவரை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்துப் பேசினார்.
புது தில்லி: தில்லி துணை நிலை ஆளுநராக இருந்த நஜீப் ஜங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று காலை அவரை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்துப் பேசினார்.
இன்று காலை 8 மணியளவில், தில்லியில் உள்ள ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குச் சென்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அங்கு நஜீப் ஜங்குடன் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த கேஜ்ரிவாலிடம், நஜீப் ஜங்கின் ராஜினாமா குறித்து கேட்டபோது, அவர் தனது சொந்த காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறினார.
நஜீப் ஜங், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் மாளிகை நேற்று மாலை செய்தி வெளியிட்டிருந்தது.
முதல்வருக்கும், ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து வந்த நிலையில், நஜீப் ஜங்கின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி வெளியான போது, கேஜ்ரிவால் ராஞ்சியில் இருந்தார். அங்கிருந்து, நஜீப் ஜங்கின் ராஜினாமா எனக்கு ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. எனினும் அவரது எதிர்காலப் பணிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார் கேஜ்ரிவால்.