மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைப்பதற்கான நடைமுறைகளை இறுதிசெய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சத்திடம் சமர்ப்பித்துள்ளது.
"நீதி ஆயோக்' எனப்படும் மத்திய கொள்கைக் குழு உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு சில மாதங்களுக்கு முன் அளித்த அறிக்கையில், இனி ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டையும் இணைத்து ஒன்றாக தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைத்திருந்தது.
இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த மாதம் கருத்து தெரிவிக்கையில், "ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைப்பது குறித்து நான் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது ரயில்வே நலன் மட்டுமின்றி நாட்டு நலனுக்கும் உகந்ததாக இருக்கும். இந்த இணைப்புக்கான நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இந்த இணைப்புக்கான நடைமுறைகளை இறுதி செய்வதற்காக ரயில்வே மற்றும் நிதித் துறை ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த உயரதிகாரிகளைக் கொண்ட 5 நபர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து விட்டதாகவும் அதை நிதியமைச்சத்திடம் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பித்ததாகவும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அவை மேலும் கூறியதாவது:
தற்போது சம்பந்தப்பட்ட அறிக்கை நிதியமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதால், ஐந்து நபர் குழுவின் பரிந்துரைகள் குறித்து எதுவும் தெரிவிக்க இயலாது. இரண்டு பட்ஜெட்டுகளையும் இணைப்பதற்கு ரயில்வே துறை ஏற்கெனவே ஒப்புதல் அளித்து விட்டது. எனவே, இவ்விஷயத்தில் நிதியமைச்சகம்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வருங்காலத்தில் பொது பட்ஜெட் அறிக்கையிலேயே ரயில் பட்ஜெட் விவரங்களை தனி இணைப்பாகச் சேர்க்கலாம் என்றும் அதில் அடுத்த நிதியாண்டுக்கான ரயில்வே துறைக்கான மானியம், செலவு, புதிய திட்டங்கள் குறித்த தகவல்களை இடம்பெறச் செய்யலாம் என்றும் ஐந்து நபர் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.