இந்தியா

தில்லி காவல் துறை முன் இன்று ஆஜராவாரா டி.டி.வி. தினகரன்?

அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கின்

DIN

அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்காக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே மேலோங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கடந்த 16-ஆம் தேதி தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவினர் கைது செய்தனர். இதையொட்டி, தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் தங்கியிருந்த அறைக்குள் சோதனையிட்ட காவல் துறையினர், ரூ.1.30 கோடியை பறிமுதல் செய்தனர்.
அழைப்பாணை: இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது குற்றம்சாட்டி தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகும் அழைப்பாணையை தினகரனிடம் தில்லி காவல் துறையின் தனிப்படை அதிகாரிகள் சென்னையில் அளித்தனர்.
இந்நிலையில், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த சுகேஷ் சந்திரசேகரையும் சென்னைக்கு தனிப்படை அழைத்துச் சென்று வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. இதையடுத்து, அவரை தனிப் படையினர் வெள்ளிக்கிழமை கொச்சிக்கு அழைத்துச் சென்று கோடிக்கணக்கில் அவர் மூலம் நடைபெற்ற பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் உள்ள சிலரின் தொடர்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்க தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை தில்லி காவல் துறை கோரியுள்ளது.
தினகரன் கடிதம்: இதற்கிடையே, தில்லி காவல் துறை அளித்த அழைப்பாணையில் சனிக்கிழமை (ஏப்ரல் 22) நகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், சனிக்கிழமை காவல் துறை முன் ஆஜரானால் விசாரணை முடிவில் தாம் கைது செய்யப்படலாம் என்றும், இதன் காரணமாக நீதிமன்றத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பிணை (ஜாமீன்) கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் டி.டி.வி.தினகரன் தரப்பு கருதுவதாகக் கூறப்படுகிறது.
காவல் துறை திட்டம்: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை டி.டி.வி.தினகரன் ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில், காவல் துறையின் விசாரணைக்காக அவர் ஆஜராகாவிட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி காவல் துறை குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதையடுத்து, சனிக்கிழமை (ஏப்ரல் 22) தமது வழக்குரைஞர்களுடன் டி.டி.வி.தினகரன் தில்லி காவல் துறை முன் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.
இதற்கிடையே, காவல் துறை விசாரணைக்கு தினகரன் ஆஜராகும் போது அவரை கைது செய்து நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுக்க தனிப் படையினர் திட்டமிட்டுள்ளதாக தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

SCROLL FOR NEXT