முகப்பு
இந்தியா

குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் 'நோட்டா'வுடன் நடைபெறும்: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குஜராத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கும் 'நோட்டா' பிரிவை சேர்த்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

குஜராத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கும் 'நோட்டா' பிரிவை சேர்த்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
இதன் மூலம் குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பிரிவு சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்டது.
எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கை அரசமைப்புச் சட்டப்படி சரியானதுதானா? என்பதை ஆய்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
குஜராத்தில் விரைவில் காலியாகவுள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் அதன் தேசியத் தலைவர் அமித் ஷா, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை அண்மையில் ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் போட்டியிடுகிறார்.
மூன்று பதவிகளுக்கு 4 பேர் களமிறங்கியுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், இத்தேர்தலில் நோட்டா பிரிவைச் சேர்ப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கொறடா சைலேஷ் மனுபாய் பார்மர் சார்பில் வழக்குரைஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், மனு தாக்கல் செய்தார். அப்போது, நோட்டாவுக்கு அரசமைப்புச் சட்டப்படி எந்த அங்கீகாரமும் இல்லை. எனவே, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றார். இதையடுத்து மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்த மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கை அரசமைப்புப் சட்டப்படி சரிதானா? என்பதை உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. இதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கைக்கு தடை விதிக்க முடியாது. மேலும் நோட்டா அமல்படுத்தப்பட்டால் மாநிலங்களவைத் தேர்தலில் ஊழல் அதிகரிக்கும் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், நோட்டா பொத்தானை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சேர்க்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டிலேயே உத்தரவிட்டுள்ளது.
அதன் பிறகு 2014-ஆம் ஆண்டிலேயே மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பிரிவு சேர்க்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.
மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், வாக்களித்த பிறகு யாருக்கு வாக்களித்தோம் என்பதை கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் முகவரிடம் காட்டிய பிறகுதான் வாக்குப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டைப் போட முடியும். கட்சி உத்தரவுக்கு மாறாக எம்எல்ஏக்கள் வாக்களித்தால், அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது. ஆனால், அவர் மீது கட்சி தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

முழு கட்டுரையைப் படிக்க →