நியூ யார்க்: இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில், 2100ம் ஆண்டில் மனிதனால் வாழ முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் கடுமையான வெப்பம் வீசத் தொடங்கியுள்ளது. நாட்டின் மிக முக்கிய உணவு உற்பத்திப் பகுதிகளான இந்து மற்றும் கங்கை ஆற்றுப் படுகைகளிலும் இந்த பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு தெற்காசியாவில் வீசிய கடும் வெயிலுக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுமார் 3,500 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், 'அறிவியல் முன்னேற்றங்கள்' என்ற ஆய்வு இதழில், இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது, உலக வெப்பமயமாதல் என்பது வெறும் உலகத்தின் பிரச்னை மட்டுமல்ல. பூமியில் மிகவும் வெப்ப நாடாக அறியப்படும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிகப் பெரிய அச்சுறுத்தல்.
21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா மிக மோசமான பிரச்னைகளை சந்திக்கும். வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸில் இருந்து 34.2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். 35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், மனித உடல் தன்னைத் தானே குளிர்வித்துக் கொள்ள இயலாது, தற்போது எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட அதிக நேரம் தேவைப்படும்.
அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தால் மனித உடல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, மரணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களும் இதில் இருந்து தப்ப முடியாது.
மேலும் இந்த வெப்பம், விவசாயத்தை பாதித்து, அதன் மூலம் மக்களை பாதிக்கும். விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டால் நிச்சயம் மக்களிடம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் மனிதர்கள் பாதிப்பு அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது இந்த அளவுக்கு மோசமாகாமல் நம்மால் தவிர்க்க முடியும். ஆனால், முற்றிலுமாக தவிர்க்கக் கூடிய விஷயம் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.