தனியார் எஃப்.எம். வானொலி நிகழ்ச்சிகள் மீது தீவிர கண்காணிப்பு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
தனியார் மற்றும் மதரீதியிலான வானொலிகளில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்காணிக்கும்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் மற்றும் மதரீதியிலான வானொலிகளில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்காணிக்கும்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை கூடுதல் செயலர் ஜெயஸ்ரீ முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கண்காணிப்பதற்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. 19 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களும், 327 மாவட்டங்களும் இக்குழுவை அமைத்தன.
இந்த குழுக்கள் மூலம், தனியார் எஃப்.எம். வானொலி நிகழ்ச்சிகளையும், மத ரீதியிலான எஃப்.எம். வானொலி நிகழ்ச்சிகளையும் கண்காணிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த குழுக்கள் மூலம், தனியார் எஃப்.எம். வானொலி நிகழ்ச்சிகளையும், மத ரீதியிலான எஃப்.எம். வானொலி நிகழ்ச்சிகளையும் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதேபோல், இதுவரையிலும் மேற்கண்ட குழுக்களை அமைக்காத மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் விரைவில் அந்த குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இந்த கண்காணிப்பில், விதிகள் ஏதேனும் தனியார் எஃப்.எம். வானொலிகளால் மீறப்படுவது தெரிய வந்தால், அதன்மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லது மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு அதை கொண்டு வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஜெயஸ்ரீ முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து இந்திய வானொலி ஒலிபரப்பு சட்டத்தின்படி, தனியார் எஃப்.எம். வானொலிகளும், மதரீதியிலான எஃப்.எம். வானொலிகளும் நடத்தல் வேண்டும்.
அதாவது, அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, நட்பு நாடுகளுக்கு எதிராக விமர்சனமோ, மதங்களுக்கு எதிரான கருத்துகளையோ கருத்துகளையோ வெளியிடக் கூடாது. இதேபோல், அநாகரீகமான மற்றும் அவதூறு கருத்துகள் உள்ளிட்டவற்றையும் ஒலிபரப்பக் கூடாது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அளித்த தீர்ப்பில், தனியார் தொலைக்காட்சிகள், எஃப்.எம்.களின் நிகழ்ச்சிகளுக்கு எதிராக தெரிவிக்கப்படும் புகார்களை விசாரிக்க அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.