இந்தியா

60 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. மருத்துவக் கல்லூரி முதல்வர் இடை நீக்கம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .
இந்த துயர நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே உத்தரவிட்டுள்ளன.
இதனிடையே, குழந்தைகள் மரணத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அமைந்துள்ளது பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனை.
ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில் சமீபகாலமாக ஆக்சிஜன் உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததனர். அதுவும் 48 மணி நேரத்துக்குள் 30 குழந்தைகள் இறந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
கடந்த 5 நாள்கள் நிலவரத்தை எடுத்துக் கொண்டால், மொத்தம் 63 குழந்தைகள் பிராண வாயு இல்லாமல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரிலேயே இத்தகைய துயரம் அரங்கேறியிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கும் வித்திட்டது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ராவை உத்தரப் பிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் பாபா ராகவ் தாஸ் மருத்துவனை செயல்படுகிறது என்பதால் இந்த அதிரடி முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.


நிலைமையை அரசு கண்காணிக்கிறது

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், நிலைமையை நேரடியாக பிரதமர் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாநில அரசிடமும் தொடர்ந்து அவர் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு நடுவே, கோரக்பூர் குழந்தைகள் மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மோடி அறிவுறுத்தியுள்ளார்.


விசாரணைக்கு உ.பி. முதல்வர் உத்தரவு

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் அல்ல. எனினும், இந்த விவகாரத்தில் யாராவது தவறு செய்தது கண்டறியப்பட்டால், அவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது. குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக விசாரிப்பதற்கு மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோரக்பூர் மருத்துவமனைக்கு நான் கடந்த மாதம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அங்கு ஏதாவது பிரச்னை உள்ளதா? என்றும் அரசிடம் இருந்து உதவி ஏதாவது தேவைப்படுகிறதா? என்றும் நான் கேட்டேன். ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லை என்று அதிகாரிகள் பதிலளித்தனர். ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகளின் குறைபாடு தொடர்பாக அவர்கள் எதுவும் கூறவில்லை என்றார் அவர்.

ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதே காரணம்: பாஜக எம்.பி.

பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் உன்னாவ் நகரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கோரக்பூர் மருத்துவமனையில் நிகழ்ந்த உயிரிழப்புகள் மிகவும் துயரமளிக்கின்றன. அங்கு ஆக்சிஜன் வாயு செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டதாலேயே குழந்தைகள் இறந்தன. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி அவற்றின் இணைப்பைத் துண்டித்த நபர்தான் இச்சம்பவத்துக்குப் பொறுப்பு என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT