இந்தியா

"புளூ வேல்' இணையதள விளையாட்டை தடை செய்ய வேண்டும்: பினராயி விஜயன்

DIN

தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் "புளூ வேல்' இணையதள விளையாட்டைத் தடை செய்து மதிப்புமிக்க மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மோடிக்கு சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இணையதளத்தில் தற்போது புளூ வேல் என்ற ஒரு விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ள வேண்டும். இது சாதாரண விடியோ விளையாட்டு போன்றதல்ல. மாறாக, இவ்விளையாட்டில் ஈடுபடுபவர்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து உத்தரவுகளைப் பெறுகின்றனர். இதன் கடைசிக் கட்டமாக தற்கொலை செய்து கொள்ளத் தூண்டப்படுகின்றனர்.
இந்த விளையாட்டானது இந்தியாவில் சில உயிர்களைப் பறித்துள்ளதையும், இது பிரபலமடைந்து வருவதையும் ஊடகச் செய்திகள் காட்டுகின்றன. புளூவேல் விளையாட்டு, ஒட்டுமொத்த சமூகத்துக்கே சவாலாகும். இதற்கு எதிராக அனைத்து பொறுப்புள்ள அமைப்புகளும் விரிவாக நடவடிக்கை எடுப்பதும் மிகவும் முக்கியமாகும்.
கேரள காவல்துறையின் இணையதளப் பிரிவானது இந்த விளையாட்டைப் பற்றி சமூக ஊடகங்கள் உள்ளிட்டவை வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டு வருகின்றன. எனினும், இந்த விவகாரத்தில் மாநில அரசால் ஓரளவுக்கே நடவடிக்கை எடுக்க முடியும். இந்த அச்சுறுத்தலைத் தடுக்க ஒரே தீர்வானது, இந்த விளையாட்டுக்குத் தடை விதிப்பதே ஆகும்.
இதை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களால்தான் செய்ய முடியும்.
எனவே, இந்தியா முழுவதும் "புளூ வேல்' விளையாட்டைத் தடை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT