இந்தியா

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு எஸ்ஐடி முடிவு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் குழு அமைப்பு

DIN

தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984-ஆம் ஆண்டில் மூண்ட கலவரம் தொடர்பான 241 வழக்குகளை முடித்துக் கொள்ளும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) முடிவை ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அமைத்தது.
உச்ச நீதிமன்றத்தில் தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி உறுப்பினர் எஸ். குர்லத் சிங் கலோன் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். அதில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி அமைப்பால், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்புடைய 293 வழக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், அப்போது 199 வழக்குகளை முடித்துக் கொள்வதென்ற முடிவுக்கு எஸ்ஐடி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு குழுவை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 199 வழக்குகளை முடித்துக் கொள்வது என்று எஸ்ஐடி எடுத்த முடிவை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகள் 2 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குத் தொடுத்திருக்கும் மனுதாரர்களில் ஒருவரது சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹெச்.எஸ். புல்கா, மேலும் 42 வழக்குகள் மீதான விசாரணையை முடித்துக் கொள்வதென்ற முடிவை எஸ்ஐடி எடுத்திருப்பதாகவும், அதுகுறித்தும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, புல்காவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து, அந்த 42 வழக்குகளை முடித்துக் கொள்ளும் எஸ்ஐடியின் முடிவையும் நீதிபதிகள் குழு ஆய்வு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த ஆய்வு பணியை முடித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கையை குழு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் நவம்பர் மாதம் 28-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் மூண்டது. அந்த கலவரத்தில், தில்லியில் மட்டும் சீக்கியர்கள் 2,733 பேர் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT