இந்தியா

ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது ஆர்ஜேடி

DIN

ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்களிடம் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி (ஆர்ஜேடி) குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நான் முதல்வர் பதவியை கடந்த மாதம் 26-ஆம் தேதி ராஜிநாமா செய்தபோது, பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியமைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது, பாஜகவிடம் இருந்து எனக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான அறிவிப்பு வந்தது. அதை கட்சி எம்எல்ஏக்களிடம் தெரிவித்தேன். அப்போது அந்த ஆதரவை ஏற்பது என்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் உடனடியாக கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில், அவர்களின் சட்டப் பேரவைத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் ஆட்சியமைத்தேன்.
இதுபோன்ற பணியில் நான் ஈடுபட்டிருந்தபோது, மறுபக்கம் மிகவும் ரகசியமாக எங்களின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் நடத்தப்பட்டது. கட்சியில் இருந்து விலகும்படி, பல எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டது. அவை அனைத்தையும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் நிராகரித்து விட்டனர். இதை என்னிடம் வந்து எம்எல்ஏக்கள் தெரிவித்தனர் (ஆர்ஜேடி கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல், அக்கட்சியின்மீது குற்றம்சாட்டியுள்ளார்).
பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளக் கட்சி கூட்டணி சேர்ந்ததை விமர்சித்து வரும் மூத்த தலைவர் சரத் யாதவ், ஆர்ஜேடியின் சார்பில் வரும் 27-ஆம் தேதி நடத்தப்படும் பேரணியில் கலந்து கொண்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரது மாநிலங்களவை எம்.பி. பதவி பறிக்கப்படும். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளக் கட்சி தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், முடிந்தால் கட்சியை உடையுங்கள் என்று கட்சியிலிருக்கும் அதிருப்தியாளர்களுக்கு சவால் விடுத்திருந்தேன். அதே சவாலை தற்போது மீண்டும் நான் விடுக்கிறேன் என்று அந்த அறிக்கையில் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகாரில் ஆர்ஜேடியுடன் சேர்ந்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக நிதீஷ் குமார் விளக்கம் கேட்டபோது, அவர்கள் தரப்பில் சரிவர பதிலளிக்கப்படவில்லை. இதையடுத்து, தனது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்தார். பின்னர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தார்.
இதை ஆரம்பம் முதலே, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் எதிர்த்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT