முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ்: கன்னிப் பேச்சை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சச்சின்!

இந்தியாவில் விளையாட்டின் வளர்ச்சி குறித்து தனது கன்னிப் பேச்சை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் சச்சின் டெண்டுல்கர்.

Updated On : 22 டிசம்பர், 2017 at 6:27 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:55 PM

கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், 2012-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் இவரின் செயல்பாடு மற்றும் வருகைப்பதிவு ஆகியன அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளாகும்.

இதனால் நாடாளுமன்றத்தில் சச்சின் டெண்டுல்கரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. மேலும் அவரது உறுப்பினர் பதவியின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

சச்சின், தன்மீது இருக்கும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியாவில் விளையாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்த தனது கன்னி உரையை தயார் செய்திருந்தார்.

Advertisement

ஆனால், குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனம் காரணமாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது.

கூச்சல், குழப்பம் காரணமாக அவையை ஒத்திவைப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். 

இந்த சூழ்நிலையில், செய்வதறியாது அமைதியாக நின்றிருந்த சச்சின் டெண்டுல்கருக்கு தனது கன்னி உரையை பேச முடியாமல் போனது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தான் பேச நினைத்ததை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 15 நிமிடங்கள் அடங்கிய விடியோ பதிவை வெளியிட்டார் சச்சின் டெண்டுல்கர். அதில், பேசியதாவது:

விளையாட்டை விரும்பும் இந்தியாவை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நாடாக மாற்ற வேண்டும். இந்தியாவில் மட்டும் 75 மில்லியனுக்கும் மேல் நீரிழிவு குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பாதிப்பில் உலகளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.

எனவே இந்தியாவில் ஆரோக்கியமான விளையாட்டு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது அனைவருக்கும் ஒரே மாதிரியான வசதிகள் இடம்பெற வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற குறைபாடுகளால் அடுத்த தலைமுறை இளைய சமுதாயம் பாதிக்கப்படும். ஒவ்வொருவரும் கட்டாயம் ஒரு விளையாட்டை விளையாட வேண்டும். 

ஒவ்வொரு மாநகரங்களிலும் அதிகளவிலான மைதானங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் பிரத்தியேக விளையாட்டு நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.