கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு நீதி ஆயோக் திட்டம்
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.4 லட்சம் கோடி) மதிப்புள்ள கச்சா எண்ணெயை மட்டும் இறக்குமதி செய்யும் வகையில், மத்திய கொள்கைக் குழு
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.4 லட்சம் கோடி) மதிப்புள்ள கச்சா எண்ணெயை மட்டும் இறக்குமதி செய்யும் வகையில், மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) திட்டம் வகுத்து வருகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உடனடிக் கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பாக, அவர் மேலும் பேசியதாவது:
ஆண்டொன்றுக்கு 2,900 கோடி லிட்டர் பெட்ரோலும், 9,000 கோடி லிட்டர் டீசலும் தேவைப்படுகிறது. இதற்காக, வெளிநாடுகளில் இருந்து ஆண்டொன்றுக்கு ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மாற்றாக, மெத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம், கச்சா எண்ணெய் இற்ககுமதியைக் குறைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் லட்சியமாகும். அதை நிறைவேற்றும் வகையில், மத்திய கொள்கைக் குழு திட்டம் வகுத்து வருகிறது.
இதனிடையே, பெட்ரோலுடன் மெத்தனால் கலந்து விற்பனை செய்யும் புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. பெட்ரோலுடன் 15 சதவீத மெத்தனாலைக் கலந்து விற்பனை செய்தால், எரிபொருள் விலையில் 10 சதவீதம் குறையும்.
மேலும், மெத்தனால் பயன்பாட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது வெகுவாகக் குறையும். மெத்தனால் பயன்பாட்டால், அடுத்த 7 ஆண்டுகளில் டீசல் பயன்பாடு 20 சதவீதம் குறையும்.
சமையல் எரிவாயுவுடன் 20 சதவீத மெத்தனாலைக் கலந்து பயன்படுத்தினால், ஆண்டொன்றுக்கு 6,000 கோடி சேமிக்க முடியும். ரயில்வே துறையில் மெத்தனாலைப் பயன்படுத்தினால், எரிபொருள் செலவில் பாதியளவு குறையும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.33,700 கோடி: தூய்மை
இந்தியா திட்டத்துக்காக, கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.33,700 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சர் உமா பாரதி வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
தூய்மை இந்தியா திட்டத்துக்காக, கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ.2,850 கோடியும், 2014-15-ஆம் நிதியாண்டில் ரூ.6,525 கோடியும், 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.10,513 கோடியும், 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ.13,948.27 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உமா பாரதி தனது பதிலில் தெரிவித்தார்.