வெங்கய்ய நாயுடு ராஜிநாமா: ஸ்மிருதி இரானி, தோமருக்கு கூடுதல் பொறுப்பு
மத்திய அமைச்சர் பதவியை வெங்கய்ய நாயுடு ராஜிநாமா செய்ததை அடுத்து அவர் வகித்த பொறுப்புகள் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர் பதவியை வெங்கய்ய நாயுடு ராஜிநாமா செய்ததை அடுத்து அவர் வகித்த பொறுப்புகள் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து வெங்கய்ய நாயுடு மத்திய அமைச்சர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் செய்தி, ஒலிபரப்பு, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், அவர் வகித்து வந்த செய்தி, ஒலிபரப்புத் துறை, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பொறுப்பை ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியுடன் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளார்.
கூடுதல் பொறுப்பை ஏற்ற பிறகு அத்துறை இணையமைச்சர்களை ஸ்மிருதி இரானி சந்தித்துப் பேசினார். முன்னதாக, வெங்கய்ய நாயுடுவையும் அவர் சந்தித்தார்.