இந்தியா

ஆளுநர் மாளிகை முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை...

DIN

குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் (71) விரைவில் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடியேறவுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி பிறந்த ராம்நாத் கோவிந்த், கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
வழக்குரைஞராக...: தில்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்குரைஞராக, கடந்த 1977 முதல் 1979-ஆம் ஆண்டு வரையிலும், பின்னர், உச்ச நீதிமன்றத்தில் 1980 முதல் 1993-ஆம் ஆண்டு வரையிலும் ராம்நாத் கோவிந்த் பணியாற்றினார்.
அரசியலில்...: பாஜகவில் எஸ்.சி., எஸ்.டி. அணியின் தலைவராகப் பதவி வகித்த ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவைக்கு இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவி வகித்த 12 ஆண்டுகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு, சமூக நீதி, சட்டம் மற்றும் நீதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கான நாடளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், கட்சியின் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். ஐ.நா. சபையில் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்று உரையாற்றினார்.
கல்வித் துறையில்...: லக்னெளவில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும், கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மாநில ஆளுநராக...: கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிகார் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவற்காக, கடந்த மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வெற்றிபெற்றதை அடுத்து, விரைவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறப்போகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT