இந்தியா

அரசியல் கட்சிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

DIN

அரசியல் கட்சிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
நீதித்துறையை விமர்சிப்போருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போதிய ஆதாரமின்றி குற்றச்சாட்டு தெரிவிப்போர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. இதை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்டத் துறை இணையமைச்சர் பி.பி. சௌதுரி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்திருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், தேர்தல்களில் வெற்றி பெறும் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டிருப்பதாக சிலர் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். இதுபோன்று தேவையில்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்போர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும். பாகிஸ்தான், கென்யா போன்று உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தல் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை சட்ட மற்றும் அரசமைப்பு கண்ணோட்டத்தில் மத்திய அரசு ஆய்வு செய்தது. இதுதொடர்பாக நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை சட்ட அமைச்சகம் பரிசீலித்தது. பின்னர், தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வழங்குவது என்பது உச்ச நீதிமன்றத்தால் முன்பு வகுக்கப்பட்ட சட்டத்துக்கு எதிராக இருக்கும் என்ற முடிவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் வந்தது.
எனவே தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று அந்தப் பதிலில் மத்திய சட்டத் துறை இணையமைச்சர் பி.பி. சௌதுரி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT