உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காவிட்டால், அசாதாரண சூழலை சந்திக்க நேரிடும் என்று ராஷ்ட்ரீய கிஸான் மஞ்ச் (தேசிய விவசாயிகள் அமைப்பு) தலைவர் சேகர் தீட்சித் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து லக்னௌவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையால் மட்டும் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடாது.
விவசாயிகளின் உண்மையான பிரச்னை பயிர்க்கடன்கள் அல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதே இன்றைய அத்தியாவசியத் தேவை என்பதை அரசு உணர வேண்டும்.
குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் நீண்டகாலமாக வறுமையில் வாடி வருகின்றனர்.
விவசாயிகள் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உண்மையான அக்கறைக் கொண்டிருந்தால், அவர்களின் விளைபொருள்களுக்கு உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலையை அவர் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருவது போன்ற ஓர் அசாதாரண சூழலை (விவசாயிகள் போராட்டம்) உத்தரப் பிரதேச அரசும் சந்திக்க நேரிடும் என்றார் சேகர் தீட்சித்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.