இந்தியா

நாடாளுமன்ற பாதுகாப்பு இணை செயலராக தமிழகப் பிரிவு ஐபிஎஸ் உயரதிகாரி நியமனம்

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு இணைச் செயலராக தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு இணைச் செயலராக தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மக்களவைச் செயலகம் புதன்கிழமை பிறப்பித்தது.

இந்திய காவல் பணியில் 1995-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு உயரதிகாரியாக சந்தீப் மித்தல் பணியாற்றி வருகிறார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் புவியியல் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ள இவர், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல் மேலாண்மை முதுகலை, சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர் புலனாய்வு, சைபர் தடயவியல் ஆகியவற்றில் பட்டயக் கல்வி முடித்துள்ளார்.
பிரிட்டனின் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் உறுதி பட்டயக் கல்வியும் படித்துள்ளார்.
ஆசியாவின் மிகப் பெரிய சிறைச் சாலையாகக் கருதப்படும் தில்லி திகார் சிறையின் பாதுகாப்பு ஆய்வுக்கு தலைமை தாங்கியது, போதைத் தடுப்புத் துறை பணியின் போது சர்வதேச போதை கடத்தல் கும்பல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது, பல்வேறு வழக்குகளில் சைபர் புலனாய்வுத் திறன் மூலம் விசாரணைக்கு உதவியது போன்றவை இவரது குறிப்பிடத்தக்க சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
தமிழகத்தில் 2011-இல் இவர் டிஐஜியாக பணியாற்றிய போது, பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க காவல் துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் சுயநினைவு இழந்ததாகக் கூறி சந்தீப் மித்தல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி வந்த சந்தீப் மித்தல், தொடர்ந்து லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் தேசிய கிரிமினாலஜி மற்றும் தடயவியல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ஐ.ஜி. அந்தஸ்துடன் கூடிய இப்பதவியில் இருந்து அண்மையில் மத்திய ரிசர்வ் காவல் படை ஐ.ஜி.யாக இவர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
2019, செப்டம்பர் 27-ஆம் தேதி வரை மத்திய அரசுப் பணியில் சந்தீப் மித்தல் இருக்க முடியும். இந்நிலையில், நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு இணைச் செயலராக இவரை மக்களவைச் செயலகம் நியமித்துள்ளது.
விரைவில் இவர் புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT