முகப்பு
இந்தியா

'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

இந்தியா

'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:44 PM
பகிர்:

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
முன்னதாக, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.பந்த், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு திங்கள்கிழமை விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வகை செய்யும் 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கிறோம். இதுதொடர்பான மனுவை கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு விசாரித்துப் பிறப்பிக்கும் உத்தரவுக்கு உள்பட்டு, இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.
'நீட்' விவகாரம் தொடர்பான மாணவர் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஆகியவற்றை உச்ச நீதிமன்ற முழு அமர்வு பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளலாம். 'நீட்' தேர்வு விவகாரம் தொடர்பான மனுக்களை வேறு எந்த உயர் நீதிமன்றங்களும் விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
உச்ச நீதிமன்றத்துக்கு கடந்த மே 11 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறையாகும். இந்தக் காலகட்டத்தில் முக்கிய வழக்குகள், அவசர வழக்குகளை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நியமித்துள்ளார்.
இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த மே 24-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இதனால், தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்புகளில் சேர தாமதமானது. இதைக் கவனத்தில் கொண்டு சிபிஎஸ்இ தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காகக் கருதி விடுமுறை கால அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து வரும் 26-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பின்னணி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர 'நீட்' தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 2017-18 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வை கடந்த மே 7-ஆம் தேதி சிபிஎஸ்இ நடத்தியது. ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தமிழ், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்பட பல்வேறு மாநில மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இத்தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்த வினாக்களுக்கும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இடம் பெற்ற வினாக்களுக்கும் மிகுந்த வேறுபாடு இருந்ததாகவும் மாநில மொழி வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்ததாகவும் கூறி ஒரு பிரிவு மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →