ஊகங்களுக்கு முடிவு கட்டிவிட்டார்: அமித் ஷாவுக்கு வெங்கய்ய நாயுடு நன்றி!
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தான் அறிவிக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு முடிவு கட்டிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தான் அறிவிக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு முடிவு கட்டிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாடு கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக அமித் ஷா அறிவித்த 3 பேர் குழுவில் வெங்கய்ய நாயுடுவும் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அமைத்த குழுவில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோருடன் நானும் இடம் பெற்றுள்ளேன்.
இதன் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட இருப்பதாக வெளியான ஊகங்களுக்கு எங்கள் கட்சித் தலைவர் முடிவு கட்டிவிட்டார். இதன் மூலம் அவர் எனக்கு பெரிய உதவியைச் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகத்தின் வலிமையை நிலைநாட்டும் வகையில் அனைத்துக் கட்சிகளுடனும் பாஜக பேச்சு நடத்தும். நாங்கள் இப்போது ஆளும் கட்சியாக இருக்கிறோம். எனவே, குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனைவரது ஆதரவையும் கோருவோம்.
இது தொடர்பாக எங்கள் கட்சித் தலைவரிடம் ஏற்கெனவே பேசிவிட்டோம். அடுத்த சில நாள்களில் பிற கட்சித் தலைவர்களுடன் எங்கள் குழு பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்றார் வெங்கய்ய
நாயுடு.