இந்தியா

சபரிமலை கோயில் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டது

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடு பதிக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட கொடி மரத்தில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டு, மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

தேக்கு மரத்தில் உருவாக்கப்பட்டு தங்கத் தகடு பதிக்கப்பட்ட புதிய கொடிமரம் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிறுவப்பட்டது. அந்த மரத்தின் ஒரு பாகம் சேதம் அடைந்திருந்தது பிற்பகலில் கண்டறியப்பட்டது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சில மர்ம நபர்கள் ஒருவித ரசாயனத்தை கொடி மரத்தில் தெளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொடிமரத்தை தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கொடி மரத்தில் ஏற்பட்ட சேதம் ஞாயிற்றுக்கிழமை இரவே சரிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடி மரம் மீண்டும் நிறுவப்பட்டது என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், கோயில் கொடி மரத்தின் பீடத்தில் தங்கள் மாநில வழக்கப்படி பாதரசத்தைத் தெளித்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை.
கொடிமரம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சபரிமலை அடிவாரப் பகுதியான நிலக்கல் முதல் ஐயப்பன் சந்நிதானம் வரை யாத்ரிகர்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய பாதுகாப்புக் கட்டமைப்பை நிறுவத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். இதனிடையே, மேற்கண்ட சம்பவத்தின் விளைவாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக பத்தனம்திட்டா மாவட்டத்தில் மண்டல காவல்துறை ஐஜி மனோஜ் ஆப்ரஹாம் திங்கள்கிழை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கொடிமரம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக சதிச்செயல் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடி மரத்தில் பதிக்கப்பட்ட தகட்டில் 9.16 கிலோ தங்கமும், 17 கிலோ வெள்ளியும், 300 கிலோ செம்பும் கலக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடி மரத்தை சபரிமலை ஐயப்பன் கோயிலின் தலைமை பூஜாரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகளைச் செய்து ஞாயிற்றுக்கிழமை நிறுவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT