இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களித்தால் மீரா குமார் வெற்றி பெறுவார்: கனிமொழி

DIN

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் மனசாட்சிப்படி வாக்களித்தால், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மீரா குமார் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பிகார் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 23-ஆம் தேதி தனது வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தனது வேட்புமனுவை புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாரம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா எம்.பி., திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேட்புமனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார், அரசியலில் மிகுந்த அனுபவம் மிக்கவர். திறமையானவர். மக்களவைத் தலைவராக இருந்தவர். இதனால், தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால், மீரா குமார் நிச்சயமாக வெற்றிபெறுவார் என்று நம்புகிறேன்.
இத்தேர்தலைப் பொருத்தமட்டில் கொள்கை அடிப்படையில் அணுகக் கூடாது என்று கூறுவது சரியல்ல. அரசியல் என்பதே கொள்கையின் அடிப்படையிலானதாகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார், திமுக தலைவர்களிடம் நேரில் ஆதரவு கேட்பதற்காக தமிழகம் வர உள்ளதாக அறிகிறேன்.
தமிழகத்தில் பான் மசாலா, குட்கா பொருள்களுக்கு அனுமதி வழங்க சுகாதாரத் துறை அமைச்சர், காவல் துறை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்ôக எழுந்துள்ள புகார் மிகவும் பயங்கரமானதாகும். இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். தமிழக அரசும் இதற்கு மக்கள் மன்றத்தில் பதில் கூற வேண்டும்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்குத்தான் தமிழக அரசு மறுத்து வருவதாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதற்கும் ஒரு படிமேலே செல்லும் விதமாக இளைஞர்களைப் பாதிக்கும் பான் மசாலா, குட்கா பொருள்கள் விற்பதற்கு காவல்துறை அதிகாரிகளும், அமைச்சரும், அரசும் உடந்தையாக இருப்பது தெரிகிறது.
இது போன்ற பிரச்னைகளை சட்டப் பேரவையில் எழுப்புவதற்கு திமுக எம்எல்ஏக்களை அனுமதிக்காமல் ஜனநாயக விரோதப் போக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், மக்கள் மன்றத்தை திமுக அணுகும் நிலை உள்ளது என்றார் கனிமொழி.

ஜூலை 1-இல் தமிழகம் வரத் திட்டம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடம் நேரில் ஆதரவு திரட்டுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோர ஜூலை 1-ஆம் தேதி மீரா குமார் தமிழகம் வர உள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT