அமித் ஷாவுக்கு விருந்தளித்தவர்கள் மம்தா கட்சியில் ஐக்கியம்!
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு விருந்தளித்த பழங்குடியினர் குடும்பம், திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு விருந்தளித்த பழங்குடியினர் குடும்பம், திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, நக்ஸல்பாரி மாவட்டத்தில் உள்ள தக்கின் கிராமத்துக்கு அமித் ஷா சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பழங்குடியினர் குடும்பத்தினரின் குடிசை வீட்டுக்குச் சென்ற அவர், அங்கேயே மதிய உணவு அருந்தினார். இந்தச் செய்தியானது நாடு முழுவதும் ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து, அமித் ஷாவின் இந்தச் செயலானது பழங்குடியின மக்களை ஏமாற்றுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் விமர்சித்திருந்தன.
இந்நிலையில், அமித் ஷாவுக்கு விருந்தளித்த பழங்குடியினர் குடும்பத்தினர் புதன்கிழமை திடீரென திரிணமூல் காங்கிரஸில் உறுப்பினர்களாக இணைந்தனர். இந்த நிகழ்வானது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாஜக குற்றச்சாட்டு: இதனிடையே, குறிப்பிட்ட பழங்குடியினர் குடும்பத்தை கடத்தி வைத்து மிரட்டி, திரிணமூல் காங்கிரஸில் இணைத்திருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அமித் ஷாவுக்கு விருந்தளித்த பழங்குடியினர் குடும்பத்தினரை திரிணமூலைச் சேர்ந்த ரவுடிகளால் மிரட்டப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்என்றார் திலீப் கோஷ்.