தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா, சிங்கப்பூர் கடற்படை கூட்டாக இணைந்து 7 நாள் நடத்தவுள்ள போர் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து இந்தியக் கடற்படை செய்தித்தொடர்பாளர் டி.கே. சர்மா கூறியதாவது:
தென் சீனக் கடல் பகுதியில் சிங்கப்பூர் கடற்படையுடன் இணைந்து 7 நாள்கள் போர் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளோம். கப்பலிலிருந்து தாக்குவது, விமானம் மூலம் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பலை குறிவைத்து தாக்குவது போன்றவற்றில் ஒத்திகை நடைபெற உள்ளது என்றார் சர்மா.
இந்தியக் கடற்படை சார்பில் 4 போர்க் கப்பல்களும், எதிரிநாட்டின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பலையும் கண்டறிந்து தாக்கி அழிக்கும் போர் விமானமும் இந்த போர் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
இதேபோல், சிங்கப்பூர் கடற்படைக்கு சொந்தமான சில போர்க்கப்பல்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளது. இருநாட்டு கடற்படைகளும் முதல்முறையாக கடந்த 1994-ஆம் ஆண்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. தற்போது 24-ஆவது முறையாக இருநாடுகளும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
சர்வதேச கடல் போக்குவரத்தின் முக்கியப் பாதையாக திகழும் தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.