ஆதார் கட்டாயச் சட்டம் செல்லுபடியாகுமா?: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டம் செல்லுபடியாகுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 3) விசாரிக்கிறது.
ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டம் செல்லுபடியாகுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 3) விசாரிக்கிறது.
மத்திய அரசின் ஆதார் சட்டம், அரசியல் சாசனம் அளிக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தனியுரிமைக்கு (பிரைவசி) எதிரானது எனவும், ஆதாரின் விரல் ரேகை மற்றும் விழித்திரை விவரங்களை சேகரிக்கும் முறையில் குறைபாடுகள் இருப்பதாகவும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேத்யூ தாமஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே, அரசின் பல்வேறு சலுகைககளைப் பெறுவதற்கு ஆதார் அட்டைகள்அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்டுள்ளன.
வங்கிக் கணக்குகளுடனும், செல்லிடப் பேசி எண்களுடனும் ஆதார் எண்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சட்டத்துக்குப் புறம்பானது எனவும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும் சில மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் ஆதார் சட்டத்துக்கு எதிரான அனைத்து மனுக்களையும் விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடந்த மாதம் 30-ஆம் தேதி தெரிவித்தார்.
இந்த நிலையில், மேத்யூ தாமஸ் தாக்கல் செய்த மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவரது வழக்குரைஞர் நீதிபதி ஜே. செலமேஸ்வர் தலைமையிலான அமர்விடம் கோரினார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ஆதார் தொடர்பான பிற மனுக்களும் வெள்ளிக்கிழமை (நவ. 3) விசாரணைக்கு வருவதால், மேத்யூவின் மனுவும் அவற்றுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.