உத்தர பிரதேசத்தில் ரேஷனில் பொருள் மறுக்கப்பட்டதால் பட்டினி கிடந்து 50 வயது பெண் மரணம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகளுக்கு அரசு நியாய விலை கடையில் பொருள் மறுக்கப்பட்டதால் மனைவி உயிர் இழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகளுக்கு அரசு நியாய விலை கடையில் பொருள் மறுக்கப்பட்டதால் மனைவி உயிர் இழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
உயிர் இழந்த பெண் ஷகினா அஷுபாக்கின் உடல் நிலை கடந்த சில நாட்களாகச் சரியில்லாமல் போனதால் அவர் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இன்னிலையில் அவருக்கு உணவு அளிக்க ரேஷன் கடையில் பொருட்களை வாங்கச் சென்ற மோஹட் இஷாக்கிடம் அதிகாரிகள் அவரது மனைவி நேரில் வந்து கைரேகையை சரிபார்த்து உறுதிப் படுத்திய பின்னரே பொருட்கள் தர முடியும் என்று கூறியுள்ளனர். தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை அவரால் இவ்வளவு தூரம் வர முடியாது என்று தெரிவித்தும் அந்தப் பதிலை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஷகினாவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக ஷகினாவின் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதால் அவரை நேரில் வர வேண்டும் என்றதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசின் அன்யோதயா திட்டத்தின் கீழ் இவர்களின் குடும்பத்திற்கு மாதமும் 35 கிலோ கோதுமையுடன் அரிசி, சர்க்கரை ஆகியவை தரப்பட வேண்டும்.
பரேலி நகரின் உணவு தானிய விநியோக பிரிவு தலைமை அதிகாரியான சீமா திரிபாதி கூறுகையில் “நேரில் வந்து கை ரேகையை உறுதி செய்தால் தான் பொருட்கள் தரப்படும் என்று யாரையும் வற்புறுத்தும் அதிகாரம் எங்களுக்குக் கிடையது, பத்திரிகையில் பார்த்துத்தான் இதைப்போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதே எனக்குத் தெரியவந்தது, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
உயிர் இழந்த ஷகீனாவின் வங்கி கணக்கில் ரூ.4,000 இருப்பதாகவும், அவ்வளவு பணம் இருந்தும் ஏன் அவர் பட்டினி கிடக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆகையால் ஏற்கனவே நோய்வாய் பட்டிருந்த அவர் உண்மையில் பசியால் தான் உயிர் இழந்தாரா என்பதைக் கண்டறிய மருத்துவர்களிடம் காவல் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.