போர் விமான ஒப்பந்தம்: மோடி மீது ராகுல் புகார்
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முழுவதையும், தனியொரு தொழிலதிபர் ஆதாயம் அடையும் வகையில் பிரதமர் மோடி திருத்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முழுவதையும், தனியொரு தொழிலதிபர் ஆதாயம் அடையும் வகையில் பிரதமர் மோடி திருத்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ரூ.59,000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் முன்னிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து, ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து, 'டஸால்ட் ரிலையன்ஸ் ஏவியேஷன்' என்ற கூட்டு நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி உருவாக்கின.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பிரதமர் மோடி, தொழிற்துறையைச் சேர்ந்த தனது நண்பர் ஆதாயம் அடையும் வகையில் ஒப்பந்த விதிகளில் திருத்தம் செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, இது தொடர்பாக கூறியதாவது:
செய்தியாளர்கள் எந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாலும், அதற்கு நான் பதிலளிக்கிறேன். ஆனால், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிறுவனம் தொடர்பாக, மோடியிடம் நீங்கள் (செய்தியாளர்கள்) ஏன் கேள்வி கேட்கவில்லை?
இதேபோல், பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில், தனியொரு தொழிலதிபர் மட்டுமே ஆதாயம் அடையும் வகையில், பிரதமர் மோடி திருத்தம் செய்துள்ளார். இதுதொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
பாஜக மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. ''முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான சொகுசு ஹெலிகாப்டர் கொள்முதல் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார்கள்; அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைக்கிறது'' என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, 'இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதற்கு முன், காங்கிரஸ் கட்சி தங்களுடைய ஆட்சிக் காலத்தைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்' என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மேலும், ''மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை; இதை காங்கிரஸ் கட்சியினரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை'' என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பொதுத் துறை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்)' நிறுவனத்தை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது:
பிரான்ஸின் 'டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனம், ஹெச்ஏஎல் நிறுவனத்துக்குப் பதிலாக 'ரிலையன்ஸ் டிஃபென்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்ட தொகையை விட 3 மடங்கு விலை கொடுத்து போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனால், அரசுக்கு பெருமளவில் நிதியிழப்பு ஏற்படும் என்றும் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.
விமானப் படை தளபதி விளக்கம்
: ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில், அதிக விலைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்று விமானப் படையின் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
ரஃபேல் கொள்முதல் நடவடிக்கை, இந்தியா-பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். சரியான விலை கொடுத்தே போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதிக விலை கொடுக்கப்படவில்லை. எனினும், ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை.
முதல் கட்டமாக, 2 ரஃபேல் போர் விமானங்கள் தயார் நிலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில், இருந்து 50 சதவீத தொகை சேமிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத் தயாரிப்புக்கான தொழில்நுட்பம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்குச் செல்லாமல் இருக்கலாம். எனினும், அந்த தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) கிடைக்கவுள்ளது என்றார் அவர்.
'அந்தத் தொழில்நுட்பத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெறவுள்ளதா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.