இந்தியா

டெங்கு: ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வருகை: பிரதமரைச் சந்தித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

DIN

டெங்கு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக மத்தியஅரசின் மருத்துவக் குழு தமிழகத்துக்கு வர உள்ளது என்று பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்த பிறகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் புதன்கிழமை இரவு தில்லி வந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வா.மைத்ரேயன் ஆகியோர் வியாழக்கிழமை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசினர்.
அதிமுகவின் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகள் இணைந்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். தமிழக அரசின் சார்பில் முதல்வர் பழனிசாமி, மாநில வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து என்னிடம் அளித்திருந்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்து அதன் சாராம்சங்களை விளக்கிக் கூறினேன். தமிழகத்தில் மின்சார உற்பத்திக்காக தேவைப்படும் நிலக்கரியை தேவையான அளவு தர வேண்டும் என்றும் கோரினேன். 
அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமரின் "அனைவருக்கும் வீடு' திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தின் தேவை 10 லட்சம் வீடுகள். இத்திட்டத்தின் கீழ் தற்போது 3 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு கூடுதலாக வீடுகள் ஒதுக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். நான் கூறிய பல்வேறு விஷயங்களை கூர்ந்து கேட்டறிந்த பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். பிரதமரிடம் அரசியல் குறித்து ஏதும் பேசவில்லை.
தமிழக முதல்வருக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுவது தவறு. அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், தலைவர் ஜெயலலிதா ஆகியோர் எந்த நோக்கத்திற்காக இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வந்தார்களோ அதே நோக்கத்திற்காக கட்சி செயல்படும். அதற்காகவே நானும், முதல்வரும் போராடினோம். தற்போது அதுபோன்று கட்சி செயல்பட்டு வருகிறது. எங்கள் இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏதும் இல்லை. நாங்கள் மேற்கொண்ட தர்ம யுத்தம் முடிவுற்று அதிமுக ஒன்றுபட்டுள்ளது. அதிமுகவில் இனி பிளவு ஏதும் ஏற்படாது.
டெங்கு பாதிப்பு: தமிழகத்தில் நிலவும் டெங்கு நோய் சூழல் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நோய் பரிசோதனைக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமரும் உடனடியாக மத்திய அரசின் மருத்துவக் குழுவை தமிழகத்துக்கு அனுப்பவும், தேவைகள் குறித்து அறியவும் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT