இந்தியா

ரூபாய் நோட்டு வாபஸால் எவ்வளவு கருப்புப் பணம் ஒழிந்தது? நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஆர்பிஐ அறிக்கை

DIN

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் எந்த அளவுக்கு கருப்புப் பணம் ஒழிந்தது என்பது குறித்த விவரம் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.
இதனால், உள்நாட்டில் உள்ள கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் உத்வேகம் ஏற்படும் என்று மத்திய அரசு கூறி வந்தாலும், இந்த நடவடிக்கையால் பலன் கிடைக்கவில்லை, பாதிப்புகள்தான் அதிகம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை; பல சிறு தொழில்கள் முடங்கின, முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்; பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் எதிர்க்கட்சிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இந்த நடவடிக்கை தொடர்பாக நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்து ஆர்பிஐ அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மொத்தம் ரூ.15,280 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளன. இது எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்பட்டதுதான். எனினும், ரூபாய் நோட்டு வாபஸால் எந்த அளவுக்கு கருப்புப் பணம் ஒழிந்தது என்பதற்கான விவரம் கிடைக்கவில்லை. இதேபோல கருப்புப் பணம் எந்த அளவுக்கு வெளிக் கொண்டுவரப்பட்டது என்ற தகவலும் இல்லை.
மேலும், பழைய ரூபாய் நோட்டுகள் பல வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் இருந்து இன்னும் முழுமையாக ஆர்பிஐ-க்கு வரவில்லை. அதனை முழுமையாகக் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு ஆர்பிஐ நேரடியாகப் பதிலளிக்கவில்லை. ஒட்டு மொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும்போது ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மேம்பட்டுள்ளது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
இதற்கு முன்பு ஆர்பிஐ அளித்த அறிக்கையில், எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என்பது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இல்லை என்று கூறிய நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சிலர், மீண்டும் அறிக்கை அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT