இந்தியா

மும்பை ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் நெரிசல்: 23 பேர் பலி; 38 பேர் காயம்

DIN

மகாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகரான எல்பின்ஸ்டன் சாலை ரயில் நிலையம் அருகே நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, எல்பின்ஸ்டன் புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலத்தில் மக்கள் ஒதுங்கினர். அப்போது மின்கசிவு ஏற்பட்டதாக பரவிய வதந்தி காரணமாக ஒரே நேரத்தில் ஏராளமானோர் படிகளைத் தாண்டி வெளியேற முயற்சித்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 23 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 17 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
முன்னதாக, இவ்விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
இந்த விபத்து தொடர்பான உயர்நிலை விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.
ஃபட்னவீஸ் நேரில் ஆறுதல்: கூட்ட நெரிசல் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று இனி ஒரு விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்' என்றார்.
தலைவர்கள் இரங்கல்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
"மோடி அரசே காரணம்': இதனிடையே, நெரிசல் காரணமாக ஏற்பட்ட விபத்துக்கு மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சோனியா காந்தி கூறுகையில், "ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. பயணிகளின் பாதுகாப்புக்கான உரிய திட்டமிடல் இருந்திருந்தால் இதுபோன்ற விபத்தைத் தவிர்த்திருக்கலாம்' என்றார்.
பொது நல மனு தாக்கல்: கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதீப் பாலேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தல் இந்த மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த விபத்து தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தசரா விழா தவிர்ப்பு: இதனிடையே, நெரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்ததை அடுத்து, தசரா விழாவைக் கொண்டாடாமல் தவிர்த்துவிட முடிவு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேற்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் ரவீந்தர் பக்கர் கூறுகையில், "ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் தசரா விழாவை சனிக்கிழமை கொண்டாடாமல் தவிர்க்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT