கேரளத்தில் தலித் அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம்
எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விவகாரத்தை முன்வைத்து, கேரளத்தில் தலித் அமைப்புகள் சார்பில்
எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விவகாரத்தை முன்வைத்து, கேரளத்தில் தலித் அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல்களும், பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பங்களும் நிகழ்ந்தன.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு, அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகளும் தலித் அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கேரளத்தில் சுமார் 30 தலித் அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தலித் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த தலித் தலைவர்களில் முக்கியமானவரான எம்.கீதானந்தன், கொச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்.
கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. திருச்சூரில் அரசு பேருந்து மீது கல்வீசப்பட்டதில் ஓட்டுநர் காயமடைந்தார். முழு அடைப்பையொட்டி, கேரள பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டன.
திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் தலித் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக, இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்தது. எஸ்சி, எஸ்டி சமூகத்தினரின் உரிமைகளை நீர்க்கச் செய்யும் எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் ஆதரிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.